3ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 8 வயது சிறுமி ஒருவர் 3ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில்,இன்று காலை பள்ளி வந்த சிறுமி, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், பள்ளிக்கு வந்த சிறுமி நடந்து சென்று ஒரு பெஞ்சில் அமர்கிறார். அதன் பிறகு, திடீரென தனது மார்பில் கையை வைத்து சரிந்து விழுகிறார். அதனை கண்ட அங்கிருந்த ஆசிரியர்கள், அந்த சிறுமிக்கு உதவ விரைவது வீடியோ முடிவடைகிறது. இதனையடுத்து, அந்த சிறுமியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
போலீசார், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாரடைப்பு காரணமாக அந்த சிறுமி உயிரிழந்துள்ளார் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.