கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. அதன்படி, பிரதமர் மோடி மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமராக பதவியேற்று பொறுப்பு வகித்து வருகிறார். இதற்கிடையில் பிரதமர் மோடி அரசு குறித்து தவறாக பேசியதற்காக மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த 10ஆம் தேதி பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய போது, “கொரோனாவுக்குப் பிறகு, அரசாங்கங்கள் வழங்கிய தகவல்களில் மக்கள் நம்பிக்கையை இழந்தனர். இதன் காரணமாக 2024இல் நடந்த தேர்தல்களில் அரசுகள் தோல்வியடைந்தன. இது அமெரிக்கா மட்டுமல்ல. அமெரிக்காவில் உள்ள பலர் இதை ஒரு வகையான அமெரிக்க நிகழ்வாகக் கருதுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் கொரோனா மீதான எதிர்வினை உலகெங்கிலும் உள்ள பல அரசாங்கங்களின் நம்பிக்கையில் முறிவை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அதாவது, 2024 உலகெங்கிலும் ஒரு பெரிய தேர்தல் ஆண்டாக இருந்தது. இந்தியா உள்ளிட்ட டன் கணக்கான நாடுகளில் நடந்த தேர்தல்களில், ஆட்சியில் இருந்தவர்கள் தங்களது பதவியை இழந்துள்ளனர்” என்று கூறினார்.
இதற்கு எதிர்வினையாற்றிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா 2024 தேர்தலை 640 மில்லியன் வாக்காளர்களுடன் நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது இந்திய மக்கள் தங்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். 2024 தேர்தல்களில் இந்தியா உட்பட பெரும்பாலான பதவியில் இருக்கும் அரசாங்கங்கள் கொரோனா நோய்க்கு பிந்தைய தோல்வியை சந்தித்தன என்று ஜுக்கர்பெர்க் கூறுவது உண்மையாகவே தவறானது’ எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நம்பகத்தன்மையை மெட்டா நிறுவனம் இழந்திருப்பதாக அஸ்வினி வைஷ்ணவ் புகார் அளித்திருந்தார். மார்க் ஜுக்கர்பெர்க் பேச்சு பற்றி விசாரித்த நாடாளுமன்ற நிலைக்குழு, மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் தெற்காசிய இந்திய பிரிவுக்கான தலைவர் ஷ்வ்நாத் துக்ரால் மெட்டா நிறுவனம் சார்பாக மன்னிப்பு கேட்டார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘ பல நாடுகளில் 2024 தேர்தல்களில் ஆளும் கட்சிகள் ஆட்சியை இழந்தாலும், இந்தியாவில் ஆட்சியை இழக்கவில்லை. ஆட்சியில் உள்ள கட்சிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற மார்க்கின் அவதானிப்பு பல நாடுகளுக்கு பொருந்தும், ஆனால் இந்தியாவுக்கு அல்ல. இந்த கவனக்குறைவான தவறுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம். மெட்டாவுக்கு இந்தியா மிக முக்கிய நாடாக உள்ளது. மேலும், அதன் புதுமையான எதிர்காலத்தின் இதயத்தில் இருப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.