திருவள்ளுவர் தினத்தையொட்டி, இன்று (15-01-25) மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், 930 காளைகள் களத்தில் சீறிப் பாய்ந்து விளையாடியது. இப்போட்டியில், மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என52 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மது அருந்தியதாகவும், எடை குறைவு உள்ளிட்ட காரணங்களால் 42 வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
9 சுற்றுகளாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி, தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியில், 14 காளைகளை அடக்கி நத்தம் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் முதலிடத்தை பிடித்துள்ளார். மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசி என்பவர், 12 காளைகளை அடக்கி 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 11 காளைகளை அடக்கி பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் பரிசு வென்ற மாடுபிடி வீரர் பார்த்தீபனுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பிடித்த துளசிக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. முதல் இடத்தை காளையின் உரிமையாள விஜய் தங்கபாண்டிக்கு முதல்வர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பீரோ, கட்டில், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தைப் பொங்கலை முன்னிட்டு நேற்று(14-01-25) மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 19 காளைகளை பிடித்து கார்த்தி என்பவர் முதல் இடத்தை பிடித்தார். மலையாண்டி என்பவரின் காளை, சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக மலையாண்டிக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.