பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த போட்டியை காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வருகை தருவார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில், 19 காளைகளை பிடித்து கார்த்தி என்பவர் முதல் இடத்தை பிடித்தார். மலையாண்டி என்பவரின் காளை, சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக மலையாண்டிக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று (15-01-25) மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது வரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 8ஆம் சுற்றுகள் முடிவடைந்துள்ளது. இதுவரை, மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 43 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், மது அருந்தியதாகவும், எடை குறைவு உள்ளிட்ட காரணங்களால் 42 வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
8ஆம் சுற்றில் முடிவில், 8 காளைகளை பிடித்து நத்தம் பார்த்தீபன் முதலிடத்தை பிடித்துள்ளார். தலா 6 காளைகளைப் பிடித்து துளசி, கமல்ராஜ் ஆகியோர் 2வது இடத்தை பிடித்துள்ளனர். 3 காளைகளைப் பிடித்து பிரபா என்பவர் 3வது இடத்தை பிடித்துள்ளார்.