ஸ்டான்லி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் கண்ணன் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை 12 வார காலத்திற்குள் முடித்து, இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய, தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு பிரிவில் பயிற்சி மருத்துவராக திருப்பூர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கண்ணன் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், கடந்த ஜூலை 20 -ஆம் தேதி திடீரென விடுதியின் 3 -ஆவது மாடியில் இருந்து கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மருத்துவர் கண்ணன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி, மருத்துவர் கண்ணனின் தந்தை முருகேசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், மருத்துவர் கண்ணன் 3 -ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததற்கான காயங்கள் உடலில் இல்லை. அங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை. இவ்வாறு பல்வேறு சந்தேகங்கள் உள்ள நிலையில், ஏழுகிணறு காவல் நிலையம், இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை 12 வார காலத்திற்குள் விசாரித்துமுடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, ஏழுகிணறு காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை கிழக்கு மண்டல இணை ஆணையர் மேற்பார்வையிட உத்தரவிட்டுள்ளார்.