மத்திய சென்னையின் மாநிலங்களவை உறுப்பினரான தயாநிதி மாறன் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி ரயில்வேத்துறையிடம் மனு அளித்தார். செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர் கூறியதாவது
"மத்திய சென்னை பகுதியில் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் துறைமுகம் பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் நாங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அதை ஒரு மனுவாக ரயில்வே துறையிடம் கொடுத்தோம். தாம்பரதிலிருந்து சென்னை வரையிலான ரயில் நிலையங்களிலும் அரக்கோணம் சென்னை வரையிலான ரயில் நிலையங்களிலும் கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் பெரும் சிரமப்படுகின்றனர். ஸ்வச் பாரத் என்று சொல்லும் மத்திய அரசு ரயில் நிலையங்களில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை. இதை நாங்கள் மார்ச் மாததிற்குள் முடிப்போம் என்று கூறியுள்ளனர். மேலும் யானைகவுளி பகுதியில் கட்டி வரும் மேம்பாலத்தை விரைவில் முடிக்க வலியுறுத்தியுள்ளோம்".
இவர் மேலும் கூறுகையில் " காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 9 இருந்து 12 ஆக உயர்த்தவேண்டும். இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மெட்ரோ ரயில் போல ரயில் 7 நிமிட கால இடைவேளையில் ரயில்களை இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். எழும்பூர் ரயில் நிலையத்தில் 7 வது நடைமேடை அருகே எஸ்கலேட்டர் வசதியை ஏற்படுத்தினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் அந்த ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர்களை அதிகப்படுத்தவும் தமிழ் பேச தெரிந்த நபர்களை நியமிக்கவும் கூறியுள்ளோம். மாநகர பேருந்துகளில் உள்ளது போல ரயில்களிலும் தானியங்கி கதவு பொறுத்த வேண்டும். இதனால் படிக்கட்டுகளில் பயணம் குறையும் விபத்துகள் நடக்காது. மேலும் ரயில்வே துறை தனியார் மயம் ஆகக்கூடாது என மக்களவையில் வலியுறுத்துவோம்" என கூறினார்.
இவருடன் சென்னை துறைமுகம் எம் எல் ஏ சேகர் பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் அருகில் இருந்தனர்.