ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து சரிந்ததை அடுத்து, அங்கு பரிசல் பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்தது. இதனால் அங்குள்ள முக்கிய அணைகளான கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது படிப்படியாக குறைக்கப்பட்டது.
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைகிறது. அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வந்து சேர்கிறது. இந்நிலையில் ஒகேனக்கல் காவிரியில், சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து, மறுநாளும் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் இருந்தது.
கடந்த ஒரு வாரம் முன்பு வரை ஒகேனக்கல் காவிரியில் ஐவர்பாணி, ஐந்தருவி பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருந்த நிலையில், இப்போது அவை வெளியே தெரிகின்றன.
நீர் வரத்து அதிகமாக இருந்ததால் பாதுகாப்புக்கருதி, ஒகேனக்கல் காவிரியில், கடந்த 17 நாள்களாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது நீர் வரத்து குறைந்ததால், பரிசல் பயணத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) முதல் விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளதாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பரிசல் ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். என்றாலும், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கிறது.