Skip to main content

கம கம காளான் பிரியாணி... கிராமத்து சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி! 

Published on 30/01/2021 | Edited on 30/01/2021

 

தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி என களத்தில் இறங்கி இருக்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் நடத்தி வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, 'வில்லேஜ் குக்கிங் சேனல்' எனும் கிராமத்து சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடியுள்ளார். 

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, யூடியூபில் பிரபலமான 'வில்லேஜ் குக்கிங் சேனல்' நடத்தி வரும் குழுவானது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் காளான் பிரியாணி தயார் செய்தனர். செயற்கை மசாலா பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இயற்கையாக அம்மியில் அரைத்து மசாலாக்களைப் பயன்படுத்தி கிராமத்து மண் வாசனையுடன் சமைத்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த 'வில்லேஜ் குக்கிங் சேனல்' குழுவினர். அவர்கள் சமைக்கும் இடத்திற்கு வருகைதந்த ராகுல் காந்தி, அவர்களுடன் சில வார்த்தைகள் தமிழில் பேசினார். பின்னர் குழுவினரோடு சேர்ந்து அவரும் உற்சாகமாக சமையலில் இறங்கி அவர்களுக்கு உதவிகளைச் செய்தார்.

 

அதன்பிறகு ஓலைப்பாயில் அமர்ந்து குழுவினருடன் சகஜமாக பேசி மகிழ்ந்தார். அப்பொழுது ‘எங்களுக்கு வெளிநாட்டிற்கு சென்று சமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது’ என அந்தக் குழுவினர் ராகுல் காந்தியிடம் கூறினர். அவர்கள் அமெரிக்கா சென்று உணவு தயாரிக்க தேவையான உதவிகளை செய்வதாக அக்குழுவினருக்கு உறுதியளித்தார் ராகுல் காந்தி. பிறகு தயரான சூடான கம கம மணம்வீசும் காளான் பிரியாணி தலைவாழை இலையில் இட்டு அவருக்குப் பரிமாறப்பட்டது. சமையல் குழுவினருடன் சேர்ந்து அவரும் உற்சாகமாக சாப்பிட்டு மகிழந்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்