கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சேலம் மாநகராட்சி பகுதிகளில் கடந்த 26- ஆம் தேதி முதல் இன்று (ஏப். 28) வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி, கடும் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டு வந்த காய்கறி கடைகள், உழவர் சந்தைகள், மளிகைக் கடைகள், பேக்கரி கடைகள் முற்றிலும் மூடப்பட்டன.
முழு ஊரடங்கு நாளில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் எப்போதும்போல் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகமே வீடு வீடாகச் சென்று காய்கறி, மளிகைப்பொருள்கள் விற்கும் திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இந்தப் புதிய சேவைக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று (ஏப். 27) ஒரே நாளில் 10.18 லட்சம் ரூபாய்க்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
மக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருள்கள் குறித்த விவரங்களைச் சொன்னால், அவற்றைக் கொள்முதல் செய்து வீட்டிற்கே நேரில் வந்து விநியோகம் செய்வதற்காகச் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களிலும் சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டு உள்ளன.
நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 3.15 லட்சத்துக்கு காய்கறிகள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
அத்தியாவசியப் பொருள்கள் குறித்த விவரங்களை வீடுகளில் இருந்தபடியே ஆர்டர் கொடுத்து பெற்றுக்கொண்டு, பாதுகாப்புடன் இருக்குமாறு சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.