ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இந்த 60 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் பாதி வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கிலும், மீதி வைரம்பாளையம் குப்பைக் கிடங்கிலும் வழக்கமாகக் கொட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் குப்பைகள் மிகப் பெரிய அளவில் மலைபோல் தேங்கி உள்ளது.
இந்தக் குப்பை கிடங்கில் அவ்வபோது தீ விபத்து ஏற்பட்டு அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் இங்கு குப்பைகள் சேர்ந்து வந்தது. இந்தக் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை சேருவதைத் தடுக்கும் வகையில் குப்பைகள் அனைத்தும் உரமாக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் ஓரளவு குப்பைகள் குறைந்துள்ளது. இந்த நிலையில் வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதனால் எழுந்த கரும்புகை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் பரவியது. அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பொது மக்கள் மூச்சு விடுதலில் சிரமம், கண் எரிச்சல் போன்றவற்றினால் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து இரண்டு வண்டிகளும், மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வண்டியும் சம்பவ இடத்திற்கு வந்தது. 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுபோக மாநகராட்சியில் உள்ள 10 குடிநீர் லாரிகள் அந்த இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு அதன் மூலமும் தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டு வருகிறது.
தீயை அணைக்கும் போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு வரை தீயணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு தீ ஒரளவு கட்டுக்குள் வந்தது எனினும் தீயால் ஏற்பட்ட புகை மண்டலம் இன்னும் அப்பகுதியில் சூழ்ந்துள்ளது. இரவு லேசான மழை பெய்தது இதனால் புகைமூட்டம் அதிகளவில் உள்ளது. இன்று மூன்றாவது நாளாக புகைமூட்டம் ஆங்காங்கே பரவிக் கொண்டே வர, அப்பகுதி மக்கள் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு என பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் புகைவாழ்வு எப்போது நீங்கும் என மக்கள் பரிதாபத்துடன் கேட்கிறார்கள்.