பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் கால்நடைகளுக்கு தேவையான கயிறுகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.
18 ஏக்கர் பரப்பளவில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி வாரச்சந்தை பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது பெரிய சந்தையாகும். இங்கு வாரநாட்களில் புதன்கிழமை மாட்டுச்சந்தையும், வியாழனன்று பொதுசந்தையும் கூடுகிறது. இச்சந்தைக்கு புளியம்பட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் மட்டுமின்றி ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
மாட்டுப்பொங்கலன்று விவசாயிகள் வைத்துள்ள உழவு மாடு, கறவை மாடு, எருமை மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு பழைய கயிறுகளை அகற்றிவிட்டு புதிய கயிறுகள் கட்டி அழகுபடுத்தி பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை நெருங்குவதால் மாடுகளுக்கு தேவையான கயிறு வகைகள் மற்றும் கழுத்திற்கு கட்டப்படும் மணிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேபோல்பண்டிகை நெருங்குவதால் மாடுகளின் கொம்புகளை அழகுபடுத்துவதற்காக கொம்பு சீவும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களது மாடுகளை புஞ்சைபுளியம்பட்டி சந்தைக்கு கொண்டுவந்து கொம்பு சீவும் தொழிலாளர்களின் மூலம் மாடுகளின் கொம்புகளை சீவி அழகுபடுத்தி செல்கின்றனர்.