அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் அறிவழகன்(23). இவர் சென்னை பல்லாவரம் பகுதியில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அதே பகுதியில் வேலைக்கு வந்து சென்றுள்ளார் கோவிலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர்.
இவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டு, காதலாக வளர்ந்துள்ளது. இந்த விவகாரம், அப்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. அப்போது, இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி அறிவழகன், எப்பெண்ணுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு சொந்த ஊரானன இடையாறு கிராமத்திற்கு வந்துள்ளார்.
அறிவழகனின் பெற்றோர், உறவினர்கள் வேறு வழியின்றி அறிவழகனுக்கு அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில், பெண் குடும்பத்தார் மூலம், தங்களுக்கு ஆபத்து வரலாம் அதனால், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுமதி, சென்னையில் உள்ள அப்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து காவல்நிலையம் வந்த அவர்களிடம், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அப்பெண்ணின் பெற்றோர், பெண்ணுடன் எந்த உறவும் எங்களுக்கு இல்லை. நாங்கள் அவளுக்கு அணிவித்துள்ள தங்க நகைகளை கழட்டி கொடுத்துவிட வேண்டுமென்று கூறினர். அதன்படி அப்பெண் பெற்றோர் போட்ட நகைகள் அனைத்தையும் கழற்றிக் கொடுத்தார். நகைகளை வாங்கிக் கொண்ட அவரது பெற்றோர் மகளுக்கும் தங்களுக்கும் எந்த உறவும் இல்லை என்று காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துவிட்டு சென்னை புறப்பட்டு சென்றனர்.