மன்னார் வளைகுடாவில் காணப்படும் பல கடல்வாழ் அறியவகை உயிரினங்களுள் உன்று கடல் அட்டை. மருத்துவகுணம் கொண்ட இந்த கடல் அட்டைகள் அழிந்து வரும் நிலையில் உள்ளதால் இவற்றை பிடிக்கவும், வைத்திருக்கவும், ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வயாகரா போன்ற ஆண்மை சக்தி மருந்துகள் தயாரிப்பதற்காக கடல் அட்டைகள் பிடிக்கப்பட்டு பல வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டக் கடல் பகுதிகளில் இவை அதிகமாக பிடிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு திருவனந்தபுரம் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் பல வகையான கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார், தாளமுத்து நகர் போலீசார் இணைந்து அங்குள்ள ஒரு குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு பதப்படுத்த வைக்கப்பட்டிந்த சீனி வெள்ளை நூல் அட்டை 500 கிலோவும் மற்றும் வெள்ளை நூல் அட்டை 250 கிலோவும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு சுமார் 20 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக கயத்தாறு காந்தாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சொக்கர் மகன் கண்ணன் (43), உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அவோதான் குமார் மகன் சைலேந்தர் (26) மற்றும் கான்பூரைச் சேர்ந்த ரமேஷ்குமார் மகன் பிரேம் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் கண்ணன் மீது ஏற்கனவே கடல் அட்டைகள் கடத்திய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் பிடிபட்ட 3 பேரையும் வனத்துறையினர், மன்னர் வளைகுடா கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.