![ariyalur hotel owner anbazhagan car incident at andimadam](http://image.nakkheeran.in/cdn/farfuture/-sroJzoDRSfDDITcIkxbsj877yX-0qIqaZwS-62cdWM/1739421595/sites/default/files/inline-images/ariyalur-fir-ins-art.jpg)
அரியலூரில் உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் அன்பழகன். இவர் தனது வீட்டில் இருந்து வழக்கம்போல் உணவகத்திற்குத் தனது காரில் இன்று (13.02.2025) காலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அதன்படி ஆண்டிமடம் என்ற இடத்தில் அவர் சென்ற கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பில் எதிர்ப்பாரத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் கசிந்து காரில் தீ பற்றியது. இதனைக் கண்ட அன்பழகன். காரில் இருந்து வெளியேற முயன்றுள்ளார்.
இருப்பினும் தீ மளமளவெனப் பரவியுள்ளது. இதனால் அவர் காரில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தார். அதே சமயம் இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அன்பழகனை காரில் இருந்து உயிருடன் மீட்கப் போராடினர். இருப்பினும் கார் முழுவதும் தீ பரவிப் பற்றிய எரியத் தொடங்கிவிட்டது. இதனால் அவரை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக அன்பழகன் காருக்குள்ளேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அந்தப் பகுதி முழுவதுமே சிறிது நேரம் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அன்பழகனில் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து கார் எரிந்ததில் உணவக உரிமையாளர் உடல் கருகிப் பலியான சம்பவம் அரியலூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைக்கிறது.