திருமணம் ஆகாதா? என்ற எதிர்ப்பார்ப்பில் மேட்ரிமோனி போன்ற இணையங்களில் பெண்தேடும் ஆண்களை ஏமாற்றி நகை பணம் பறிப்பில் ஈடுபட்டுவந்த கேரள பெண் தலைமையிலான கும்பல் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரும்பாக்கத்தை சேர்ந்த காளிசரண் என்பவர் மேட்ரிமோனி இணையத்தில் மணப்பெண்ணுக்காக பதிவு செய்து காத்திருந்தார். அப்போது அவரின் தொலைபேசிக்கு பெண்ணின் உறவினர் என்றும், பெயர் சாவித்திரி என்றும் ஒரு பெண் பேசியுள்ளார். அழகான பெண்ணுடைய புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இப்படி கொஞ்சநாட்கள் பழகிய பிறகு திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணின் மொபைல் நம்பர் என ஒரு மொபைல் நம்பரை கொடுத்துள்ளார். அந்த எண்ணில் பேசிய பெண் நன்கு பேசி பழகிவிட்டு இறுதியில் அந்தரங்க விஷயங்கள் தொடர்பாகவும் பேசி அவரையும் அந்தரங்கமாக பேசவைத்து அதை போனில் பதிவு செய்துகொண்டுள்ளார். நாட்கள் சென்றபின் பெண்ணின் உறவினராக பேசிய சாவித்திரி வடபழனியில் ஒரு குடியிருப்பு பகுதியில் நாங்கள் இருக்கிறோம் பெண் பார்க்கவாருங்கள் என அழைத்துத்துள்ளார்.
இதனை நம்பி அங்கு சென்ற காளிசரண் அந்த குடியிருப்பு பகுதிக்கு சென்று வீட்டுக்குள் நுழைந்ததும் நன்கு வாட்டம் சாட்டமாக இரு இளைஞர்கள், உன் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கிறார்கள் என கூறி அந்தப்பெண்ணுடன் பேசி மொபைலில் பதவிசெய்யப்பட்ட அந்தரங்க பேச்சுக்களை காட்டி செயின், பணம், மொபைல், ஏடிஎம் கார்டு அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் வந்து வாங்கிக்கொள்ளும்படி அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் அவர்கள் காவலர்கள் அல்ல என தெரியவர இதுகுறித்து காளிசரண் வடபழனி போலீசாரிடம் புகாரளிக்க, வடபழனி காவல் ஆய்வாளர் சந்துரு தலைமையில் இந்த புகாரை துப்புதுலக்கிய போலீசாருக்கு பெண் தலைமயிலான கும்பல் சிக்கியது. அந்த விசாரணையில்,
கேரள மாநிலம் எர்னாகுளத்தை சேர்ந்தவர் ரேக்கா சாவித்திரி. இவர் மேட்ரிமோனி என்னும் இணையத்தில் பெண் தேடும் இளைஞர்கள், குறிப்பாக வயது முதிர்ந்த நிலையில் பெண் தேடும் ஆண்களை குறிவைத்து அவர்களது தொலைபேசி எண்ணை சேகரித்துள்ளார். அதற்கு சாவித்திரியின் மகன் சிவா மற்றும் தங்கை மகன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உதவியுள்ளனர். அப்படி அவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் நம்பருக்கு போன் செய்து தான் பெண்ணின் பெரியம்மா என்று சிலநாட்கள் பேசிவிட்டு தன் மகளின் நம்பரை தருவதாக கூறி சாவித்திரி தனது மற்றோரு நம்பரை கொடுத்து சம்பந்தப்பட்ட நபருடன் திருமண பெண்போலவே பேசியுள்ளார். அதுவும் அவரது தமிழ் கலந்த மலையாள பேச்சில் கவிழும் ஆண்களை வகை பிரிக்கும் வேலையிலும் அந்த பெண் ஈடுபட்டுள்ளார்.
அதாவது சம்மந்தப்பட்ட ஆண் மட்டுமே இறுதி வரை பேச வேண்டும் அவரது உறவினர்கள் பெயரில் யாரேனும் கால் செய்தால் சிக்கல் வரும் என அந்த நபரை விட்டுவிடுவர். இப்படி திருமண பெண்போல பேசும் சாவித்திரி ஒரு கட்டத்தில் தன் அந்தரங்கங்களை வெளிப்படுத்தி சமபந்தப்பட்ட ஆணையும் அந்தரங்கமாக பேசவைத்து அதை பதிவு செய்துகொள்ளவார். இப்படி செய்தபின் பெண் பார்க்கவரும்படி பெண்ணின் பெரியம்மா போலவே அவரே பேசுவார். அதனை நம்பி போகும் ஆண்களை சிவாவும், கோபாலகிருஷ்ணனும் போலீஸ் என மிரட்டி நீங்கள் பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளீர்கள் என கூறி பணம், நகை, மொபைல் எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். இதைப்பற்றி புகார் கொடுத்தால் தன் மானமும் போகும் என்று நினைக்கும் ஆண்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க மறுப்பதால் இந்த கும்பல் தன் கைவரிசையை கட்ட பக்கபலமாக இருந்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சாவித்திரி, சிவா, கோபாலகிருஷ்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் 50 பேரை இதுபோல் ஏமாறியுள்ளது தெரியவந்துள்ளது. இணையத்தில் பெண் பார்க்கும் யாராக இருந்தாலும் தீர விசாரித்து அதன்பின் இறங்க வேண்டும். இது போன்ற செயல்களில் உஷார் நிலையில் இருக்கவேண்டும் என கூறுகிறது போலீஸ் தரப்பு.