கட்சியிலும் ஆட்சியிலும் தளிவான முடிவெடுக்க அதிமுகவுக்கு வலிமையான ஒற்றை தலைமை தேவை என மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பரபரப்பு கோரிக்கை வைத்தார்.
மதுரையில் இன்று அவர் நிருபர்களிடம் இப்படி ஒரு பரபரப்பு பேட்டியை அளித்தார். அதில் அவர் கூறியதாவது: இரட்டை தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது இல்லை. எனவே ஆளுமைமிக்க தலைமையை உருவாக்க வேண்டும். அதிமுகவில் யாரிடம் இப்போது அதிகாரம் இருக்கிறது என்றே தெரியவில்லை. எனவே விரைவில் அதிமுக செயற்குழு, மற்றும் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை கூட்டி ஒற்றை தலைமை குறித்து ஆலோசிக்க வேண்டும்.
![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/l1sEOZho6uXv8GsO8L1b_grdnNTOCCX1pwYqkAy1R1I/1559989665/sites/default/files/inline-images/rajancellappa.jpg)
ஜெயலலிதாவால் அங்கீகாரம் கொடுக்கப்பட்டவர்தான், தலைமைப் பதவியில் இருக்க வேண்டும். அது யார் என்பதை பொதுக்குழுவில் ஆலோசிக்க வேண்டும். இப்போது தலைமையில் உள்ள இருவருமே ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் தான் என்றாலும், அவர்களில் யார் சிறந்தவர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.
யார் யாரோ கட்சியின் கொள்கைகளை தீர்மானிக்கிறார்கள். நான் சொல்லும் கருத்துக்கள், சில இடர்பாடுகள் அதிமுகவை பலவீனப்படுத்தி விடக்கூடது. உட்கட்சி பூசலால்தான் என் மகன் தோற்றார். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்த கொள்கைகளை எக்காரணத்தை கொண்டும் விட்டுதரமுடியாது. ஓ.பி.எஸ், மகனோடு தனியாக ஜெயலலிதா சமாதிக்கு போனது ஏன்? யார் பின்னனியில் செயல்படுகிறார்கள் என்றே தெரியவில்லை.
மதுரையில் செயல்படாத அமைச்சர்கள் தான் உள்ளனர். இந்நேரம் ஜெயலலிதா இருந்தால் இப்ப இருக்கும் அமைச்சர்கள் இருக்கமாட்டார்கள். இரு தலை இருப்பதால் கட்சியில் தலைவிரித்து ஆடுகிறது. உள் பாலிடிக்ஸ் யார் யாரையும் கட்டுபடுத்த முடியவில்லை. ஒற்றை தலைமையை கொண்டுவந்தால் ஒழிய கட்சியை காப்பாற்றமுடியாது. உடனடி அறுவை சிகிச்சை எடுக்கவேண்டியது கடமை. உடனடியாக பொதுகுழுவை கூட்டினால் என் கருத்தைதான் பெரும்பாலானவர்கள் கூறுவார்கள். என்னை கட்டம் கட்டினாலும் பரவாயில்லை கட்சி காப்பாற்றபட வேண்டும் அதற்கு ஒற்றை தலைமை வேண்டும் ’’என கொந்தளித்தார் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா.