காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் சில தினங்கள் இருக்கின்றது, வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என எதிர்பார்க்கின்றோம், அப்படி அமைக்க வில்லை எனில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
கோவை தொண்டாமுத்தூரில் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு 86 எழை ஜோடிகளுக்கு திருமணம் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே 215.51 கோடி மதிப்பில் 1.94 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலத்திற்கு அடிகல் நாட்டுதல், தொண்டாமுத்தூர் பவானி கூட்டு குடி நீர் திட்டத்தினை மக்களுக்கு அர்பணித்தல் ஆகியவை சேர்த்து முப்பெரும் விழாவாக இன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திருமணங்களை நடத்தி வைத்தார். இந்து மதத்தை சேர்ந்த ஜோடிகளுக்கு தமிழ் முறைபடியும், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர் மண மக்களுக்கு அவர்கள் முறைப்படியும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ரஜேந்திரபாலாஜி,உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அமைச்சர்களும் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிறந்த நாள் விழாக்களை மக்களுக்கு பயன்படும் வகையில் கொண்டாட வேண்டும் என ஜெயலலிதா அறிவுறுத்தியபடி திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என அவர்கள் மத முறைப்படி இந்த 86 திருமணங்கள் நடத்தப்பட்டு இருப்பதாகவும், இந்த அரசு மதசார்பற்ற அரசு என்பதற்கு இந்த திருமணமே சான்று என தெரிவித்தார். இந்த அரசு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் வழியில் மதசார்பற்ற அரசாக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசாகவும் இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின், கட்சி மாநாட்டில் சொடக்கு போட்டால் இந்த ஆட்சியே இருகாது என பேசி இருக்கின்றார், கடப்பாரை வைத்து நெம்பினாலும் இந்த ஆட்சியை ஓன்றும் திமுகவால் ஒன்றும் செய்ய முடியாது. சட்டமன்றத்தில் இது வரை இல்லாத அளவு ரகளை செய்த போதே இந்த ஆட்சியை ஓன்றும் செய்ய முடியவில்லை. இந்த ஆட்சியை கலைக்கும் எண்ணம் நிறைவேறாது. அதிமுகவின் ஓன்றரை கோடி சிப்பாய்கள் இந்த ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
14 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் இடம் பெற்று இருந்த திமுக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போதே அமைத்து இருந்தால் இன்று இவ்வளவு பிரச்சினைகள் இல்லை. அதிகாரம் வேண்டும் என்பதற்காக திமுக, அப்போது நாட்டு மக்களின் நன்மையை பற்றி சிந்திக்கவில்லை. காவிரி பிரச்சினைக்காக சட்ட போராட்டம் நடத்தியவர் ஜெயலலிதா. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நல்ல வாய்ப்பை திமுகவினர் நழுவ விட்டு விட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் சில தினங்கள் இருக்கின்றது, வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என எதிர்பார்க்கின்றோம், அப்படி அமைக்க வில்லை எனில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.