அண்ணல் அம்பேத்கரை காவிச்சட்டை, திருநீறு பட்டை, குங்குமப்பொட்டு, பட்டு வேட்டித் துண்டுடன் கொண்டு சித்தரிக்கப்பட்ட போஸ்டரை இந்து மக்கள் கட்சியினர் ஒட்டியிருப்பது கும்பகோணம் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
அம்பேத்கரின் நினைவு தினம் டிசம்பர் 6 ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும், அண்ணல் அம்பேத்கரின் உருவச் சிலைக்கும் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளரான கும்பகோணத்தைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் அம்பேத்கர் படத்திற்கு காவி உடை அணிவித்து விபூதி பூசியும் குங்குமம் வைத்தும் கும்பகோணம் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருக்கிறார். இந்தப் போஸ்டர் ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்களையும் அம்பேத்கரியவாதிகளையும் கொதிப்படைய செய்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அனைத்துப் போஸ்டர்களையும் அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீசருக்கு தகவல் அளித்தனர். பிரச்சனையின் விபரீதத்தை உணர்ந்த கும்பகோணம் போலீசாரே போஸ்டரை கிழித்து அப்புறப்படுத்திய நிலையில், போஸ்டர்கள் ஒட்டிய இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் குருமூர்த்தியை தற்போது கைது செய்துள்ளனர்.
இதனிடையே பத்திரிகையாளர்களிடம் பேசிய குருமூர்த்தி, “அம்பேத்கர் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுவானவர். அவர் பௌத்த மதத்தைத் தழுவி இருந்தார். அந்த மதமும் இந்து மதத்தைச் சார்ந்ததாகும். பௌத்த மதத்தின் நிறமும் காவியாகும். அவரை ஒரு சமூகத்தினர் சாதிய ரீதியாகக் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் அம்பேத்கரை இந்து மதத்தைச் சார்ந்த பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் என உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்தப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இது போன்று அவருக்கு போஸ்டர்கள் ஒட்டப்படும்" எனக் கூறியுள்ளார்.