கல்லூரிகள் பல மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடமாக இருக்கிறது. ஆனால் சில மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் விதமாகவும் இருக்கும், காரணம் அவர்களின் நடவடிக்கைகளை பொறுத்தே அமைகிறது.
கல்லூரிகளில் ரவுடிசம் என்பது தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதை கட்டுப்படுத்துவதும், அவர்களுக்கு வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்து புரிய வைப்பதும் பேராசிரியர்களுக்கு பெரிய பிரச்சனையாக, தலைவலியாக இருக்கிறது.
இந்நிலையில் திருச்சி கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற அடிதடி தகராறு வழக்கில் நீதிமன்ற விசாரணை நீதிபதி கொடுத்த அதிரடி தீர்ப்பு பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாணவர்களுக்கு இடையே பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு ஒருவர் கட்டையினாலும், பீர் பாட்டிலாலும் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தின்போது திருச்சி கண்டோன்மெண்ட் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் கண்டு 28 மாணவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கு கீழ் நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், மாணவர்கள் அனைவரும் சமரசம் ஆவது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரணை செய்தார். விசாரணை முடிவில் 28 மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார் .
பின்னர் மோதலில் ஈடுபட்ட அடாவடி மாணவர்கள் 28 பேரும் வருகிற 22ஆம் தேதி திருச்சி விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பொது வார்டு சுத்தம் செய்யவேண்டும் . அதுதொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வரிடம் சான்றிதழ் பெற்று 26ம் தேதி கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
வீட்டிற்கும், கல்லூரிக்கும் அடங்காத கல்லூரி மாணவர்களுக்கு நீதிபதி கொடுத்த இந்த தண்டனை பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.