Skip to main content

விபத்தில் உயிரிழந்த தந்தை (ராணுவ அதிகாரி) மற்றும் மகள்..! 

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

Father (Army officer) and daughter passes away in accident

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ளது ஒதியத்தூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் 32 வயதுடைய சிவபால கண்ணன். ராணுவ வீரரான இவர் சமீபத்தில்தான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில், சிவபாலன் நேற்று முன்தினம் (10.04.2021) தனது மனைவி நர்மதா (28), மகள் ஜனனி ஸ்ரீ (9), மகன் பிரவீன் குமார் (4) ஆகியோருடன் காரில் விழுப்புரதில் உள்ள அவரது சகோதரி வீட்டுக்கு விருந்தினராக சென்றுள்ளனர்.

 

விருந்து முடிந்து மறுநாள் அதிகாலை 3 மணி அளவில், சிவபால கண்ணன் தனது மனைவி குழந்தைகளுடன் மீண்டும் தனது சொந்த ஊரான ஒதியத்தூருக்கு காரில் புறப்பட்டார். விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் மங்கலாபுரம் என்ற கிராமத்தின் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிவபால கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

மேலும், பலத்த காயமடைந்த அவரது மனைவி, குழந்தைகளை அவ்வழியே வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சிவபால கண்ணனின் மகள் ஜனனி ஸ்ரீ உயிரிழந்தார். அவரது மனைவி நர்மதா, மகன் பிரவீன் குமார் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதற்கிடையில் இந்த விபத்து நிகழ்ந்த இடத்திற்குச் சென்ற அந்தப் பகுதி கெடார் போலீசார் சிவபால கண்ணன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக கெடார் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் விபத்தில் இறந்த சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்