இன்று சிவகாசியில், விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கூட்டம், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து, முதல்வர் எடப்பாடி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறினார்.
மேலும் அவர் பேசியபோது “திருவாரூர் தொகுதியில் அழகிரி தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை. அமைச்சர் துரைக்கண்ணு எந்த சூழ்நிலையில் அப்படி பேசினாரோ தெரியவில்லை. எடப்பாடி அரசை எத்தனையோ பேர் விமர்சனம் பண்ணுறாங்க. அத்தனையையும் தாங்கிக்கிட்டுத்தான் எடப்பாடி ஆட்சி நடத்துகிறார்.
எல்லார் நாக்கையுமா வெட்டிக்கிட்டிருக்கோம்? எங்க நாக்கை யாரும் வெட்டாமல் இருந்தால் போதும். அம்மாவின் தொண்டர்கள், எடப்பாடி அமைச்சரவையில் இருப்பவர்கள் யாரும் வரம்பு மீறி பேசுவது இல்லை. அண்ணன் எடப்பாடி அடிக்கடி கூட்டம் போட்டு, அமைச்சர்களை அழைத்து, இப்படித்தான் பேச வேண்டும், இப்படித்தான் பேட்டி கொடுக்க வேண்டும், வரைமுறை மீறி யாரும் பேசக் கூடாது, மக்களிடத்தில் எப்படி பழக வேண்டும் என்று அறிவுரை சொல்லியிருக்கிறார். அவருடைய அறிவுரையை ஏற்றுத்தான் நாங்க பேசுகிறோம். எதிர்க்கட்சியினரைக்கூட வரம்பு மீறி விமர்சனம் பண்ணுவது கிடையாது. அரசாங்க ரீதியாகத்தான் பா.ஜ.க.வுடன் உறவு. அரசியல் ரீதியான உறவு கிடையாதுன்னு சி.எம். சொல்லிட்டாரு. மத்தியில் ஆட்சி அமைக்கக்கூடியவர்கள் எடப்பாடி வீட்டுக்கு வந்து கதவைத் தட்ட வேண்டும். எடப்பாடி அண்ணனைப் பார்த்துப் பேசினால்தான் சென்ட்ரலில், மத்திய அரசு அமைக்க முடியும்.” என்றார்.