தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக தங்கள் துறைகளிலுள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்கிற உத்வேகத்தில் வேகம் காட்டி வருகின்றனர் அமைச்சர்கள்.
தமிழக கால்நடை துறையில் அலுவலக உதவியாளர் (ஆபிஸ் அசிட்டெண்ட்) பணியிடங்களை நிரப்புவதற்கான பட்டியலை தயாரிக்க கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் துறையின் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். அதன்படி, கடந்த 1.7.2015 - லிருந்து உருவான காலி பணியிடம் 1573 ஆகும்.
நேர்காணல் மூலம் இப்பணியிடங்களை நிரப்ப தற்போது 2000 நபர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டு முறை இதே பணிக்கு நேர் காணல் கடிதம் அனுப்பப்பட்டு எவ்வித காரணமும் சொல்லாமலே நேர்காணல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்த பணிக்காக, தமிழகம் முழுவதும் 2,20,000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதிலிருந்து 2000 பேர் தேர்வு செய்யப்பட்டு கடிதம் அனுப்பட்டிருக்கிறது.
சம்மந்தப்பட்ட துறையின் உயரதிகாரிகள் மூலம் நேர்காணல் நடத்தி நியமனம் செய்யாமல் மாவட்ட கலெக்டர்களை நேர்காணல் நடத்திட தற்போது திடீரென உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் கலெக்டர்களை ஏன் உட்புகுத்த வேண்டும்? என விசாரித்த போது, "அதிகாரிகளிடமிருந்த காலி பணியிட பட்டியலையும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருப்பவர்களின் பட்டியலையும் அதிகாரிகளிடமிருந்து பறித்து ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கால்நடைத்துறையிலுள்ள அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களது கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படாததால் அரசு மீது கோபத்தில் இருக்கிறார்கள். காலி பணியிடங்களை நிரப்புவதில் ஒரு இடத்துக்கு 6 முதல் 8 லகரம் வரை விலை பேசப்பட்டு விற்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேலிடத்திலிருந்து தரப்படும் பட்டியலில் இருப்பவர்களை நியமிக்காமல் அதிகாரிகள் முரண்டு பண்ணுவார்கள் என்றும், விசுவாசமாக இருக்க மாட்டார்கள் என்றும் கிடைத்த தகவல்களால் அதிர்ச்சியடைந்தது மேலிடம். அதனால்தான், அதிகாரிகளிடமிருந்து பட்டியலை வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்.
கோட்டையிலிருந்து வரும் உத்தரவுக்கேற்ப செயல்பட ஆட்சியர்கள் தயாராக இருக்கிறார்கள். துறையின் அலுவலக உதவியாளர் பணி நியமனத்தில் ஊழலோ ஊழல். இதன் மூலம் சுமார் 160 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளனர் " என சுட்டிக்காட்டுகின்றனர் கால்நடை துறை அலுவலர்கள். தேர்தல் தேதி அறிவிப்பதற்குள் நேர்காணல் நடத்தி முடிக்க திட்டமிட்டு வேகம் காட்டி வருகின்றனர் மாவட்ட ஆட்சியர்கள்.