பாபர் மசூதியை இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6-ந்தேதி, டெல்டா மாவட்டங்களைத் தவிர்த்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.
தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா சென்னையிலும், பொதுச்செயலாளர் ஹைதர் அலி கடலூரிலும் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைத் தாங்குகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் தமுமுகவின் மாநில நிர்வாகிகளும் மாவட்டத் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
இதுகுறித்து தமிழகம் முழுவதும் தமுமுக நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ள கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான குணங்குடி அனீஃபா, "அயோத்தியில் பாமர் மசூதி இடிக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதனை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கஜா புயல் பாதிப்புக்கு ஆளான டெல்டா மாவட்டங்களில் அங்குள்ள தமுமுக நிர்வாகிகள் அனைவரும் நிவாரண பணிகளில் இருப்பதால் அந்த மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கிறது. இதில் சுமார் 1 லட்சம் தமுமுக தொண்டர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்" என்கிறார்.