போலியான மாட்டுவண்டி பதிவை வைத்துக்கொண்டு ஒரு நாளைக்கு பல ஆயிரம் ரூபாய் கமிஷன்களை குவிக்கும் புரோக்கர்களுக்கு வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கபடுவதாக புகார் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் மாட்டுவண்டியைக் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித்துறையின் அனுமதியோடு மாவட்டத்திலுள்ள ஆறுகளில் கட்டுமான பணிகளுக்கு குறைந்த விலையில் மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்குமுன் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளுவதற்கு தடைவித்து லாரிகளில் மட்டும் மணல் அள்ளுவதற்கு அனுமதியளித்தனர். ஒரு லாரியில் 2.5 யுனிட் மணல் ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அதிக விலை கொடுத்து மணல் வாங்க முடியாத ஏழை மக்கள் தொகுப்பு வீடுகள் மற்றும் சிறிய வீடுகள் கட்ட முடியாமல் பெரிதும் பாதிப்பு அடைந்து வந்தனர்.
அதேநேரத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சரியான விவசாய வேலைகள் இல்லாததாலும், மணல் அள்ளி விற்பனை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த தொழிலாளர்கள் மாடுகளை பராமறிக்க முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து மாட்டுவண்டி தொழிலாளர் அனைவரும் ஒருங்கிணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை என தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுகொடுத்து வலியுறுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரில் புவனகிரி அருகே ஆயிபேட்டை கிராமத்தையொட்டி ஓடும் வெள்ளாற்றில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக செயல்பட்டு வருகிறது. உண்மையாக மாட்டுவண்டி வைத்து மணல் அள்ளுபவர்களைவிட மாட்டுவண்டியே இல்லாமல் இருப்பதாக பதிவுசெய்து அனுமதி பெற்றுள்ளவர்கள் பல ஆயிரம் ரூபாய்களை தினந்தோறும் கமிஷனாக பெறுகிறார்கள் இவர்களுக்கு சம்பந்தபட்ட அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றிய செயலாளர் சதானந்தம் கூறுகையில், மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்கவேண்டும் என்று பலகட்ட தொடர் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சிஐடியு தொழிற்சங்கமும் நடத்தியது. அதன் விளைவாக மாவட்ட ஆட்சியர் மாட்டுவண்டி குவாரியை அமைத்துள்ளார். மாட்டு வண்டி வைத்துள்ளவர்கள் கிராம அலுவலர் ஒப்புதல்படி மாவட்ட ஆட்சியர் மூலம் மணல் அள்ள அனுமதி பெறுகிறார்கள். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு வண்டிக்கும் பொதுப்பணித்துறை மூலம் எண் வழங்கப்படுகிறது.
மாட்டு வண்டி இல்லாதவர்கள் மாட்டு வண்டி வாங்க விண்ணப்பித்துள்ளதாக கிராம அலுவலரின் ஒப்புதலை தவறான முறையில் பெற்று மாட்டுவண்டி வைத்துள்ளதாக போலி அனுமதி பெற்றுவிடுகிறார்கள். மேலும் மாட்டுவண்டி வைத்திருந்தபோது மணல் அள்ள அனுமதிவாங்கியவர்கள் பிறகு எதாவது காரணத்தால் மாட்டுவண்டியை விற்பனை செய்துவிட்டால் அவரிடம் மணல் ஏற்றுவதற்கான பதிவு இருக்கும். மாட்டுவண்டி வைத்துள்ளவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவுடன் அவர்களது தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வரும் அதனை குவாரியிலுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் காண்பித்து வங்கி அட்டை மூலம் ரூ105 செலுத்தி மணல் அள்ளி செல்வார்கள். ஒரு வண்டி, ஒரு நாளைக்கு, ஒரு முறை மட்டுமே குவாரியில் இருந்து மணல் அள்ளமுடியும். ஒரு வண்டி மணலை ரூ1500-க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சியராக இருந்த பிரசாந்வடநேரே உத்திரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மாட்டுவண்டி இல்லாமல் மணல் ஏற்றுவதற்கான அனுமதி பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்த குறுஞ்செய்தியை மாட்டுவண்டி வைத்துள்ளவர்களிடம் கொடுத்து ரூ1000 முதல் 2000 ஆயிரம் வரை கமிஷன் பெற்றுவருகிறார்கள். இதனால் ஒரு மாட்டுவண்டி மணலை புவனகிரி பகுதியில் ரூ 3 ஆயிரம் என்றும் சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதியில் ரூ 5000 வரையிலும் விற்பனை செய்கிறார்கள்.
மணல் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் ஏழை எளிய மக்கள் பயன்பெற மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்கினாலும் அதிக விலைகொடுத்தே வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒருநாளைக்கு ஒரு முறை மணல் அள்ளிய வண்டிகளை வேறு ஆன்லைன் பதிவு இருந்தாலும் மறுபடியும் குவாரிக்குள் அனுமதிக்ககூடாது. இப்படி அனுமதிப்பதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. இதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஏழைமக்களுக்கு மணல் எட்டாகனியாக தான் இருக்கும் என்றார்.