
ஈரோட்டில் மலையடிவார கிராமத்தில் வசித்து வந்த மூதாட்டி மற்றும் பேரன் ஆகிய இருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியை அடுத்துள்ளது தொட்டகஜானூர். இந்த பகுதியில் வசித்து வருபவர் மாதப்பா. இவருடைய தாயார் சிக்கம்மா அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். மாதப்பாவின் மகன் ராகவன்(11) அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். ராகவன் தினமும் பாட்டி சிக்கம்மா வீட்டிற்கு சென்று தூங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
நேற்று இரவு வணக்கம் போல தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் ராகவன் வீட்டுக்கு வராததால் மாதப்பா தாய் சிக்கம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் இருவரும் தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்தனர். உடனடியாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அங்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். பாட்டி மற்றும் பேரன் ஆகிய இருவரையும் அடித்துக் கொன்றது யார் எந்த காரணத்திற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட இருவரது உடல்களும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மூதாட்டி மற்றும் பேரன் ஆகிய இருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.