Skip to main content

“வேல்யாத்திரை அவர்களுக்கு பாடத்தைக் கற்பித்தே தீரும்..” - எல்.முருகன்

Published on 08/12/2020 | Edited on 08/12/2020

 

L.Murugan bjp tamilndu leader speech at 'vel yatra' conclusion

 

தமிழக பா.ஜ.க. சார்பில் நவம்பர் 06-ல் அக்கட்சியின் தமிழக தலைவர் முருகன் வேல் யாத்திரை தொடங்கினார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரையிலான முருகனின் அறுபடை தலங்கள் வழியாக வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவித்தார். நவம்பர் 06 அன்று திருத்தணியில் வேல் யாத்திரையைத் தொடங்கியபோது கரோனாத் தொற்று காரணமாகக் கூட்டம் சேரக் கூடாது என்ற லாக்டவுன் தடை காரணமாக தமிழக அரசு வேல் யாத்திரையை அனுமதிக்கவில்லை. மாறாக முருகன், திருத்தணி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்.

 

தரிசனம் முடிந்து வேல் யாத்திரை கிளம்பிய முருகன் போலீஸாரால் தடுக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன.

 

இறுதியாக, அறிவித்தபடி டிசம்பர் 06ஆம் தேதி வேல் யாத்திரை நிறைவு பெறும் என்று அறிவிப்பிற்கு ஏற்ப, அன்றைய தினம் திருச்செந்தூர் வந்த முருகன் அதிகாலை 7 மணியளவில் மூன்றரை அடி உயரத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட வேலுடன் ஆலயம் வந்து, அங்கு சண்முகரையும், முருகனையும் வழிபட்டுவிட்டு ஆலயத்தின் கொடிமரம் பக்கம் உள்ள உண்டியலில் வேலினை முறைப்படி கோவிலுக்குச் அர்ப்பணிக்கும் வகையில் செலுத்தினார். ஆனாலும், முறைப்படியான வேல் யாத்திரை நிறைவு விழா  மறுநாள் 7ஆம் தேதியன்று திருச்செந்தூரில் உள்ள கே.டி.எம். மண்டபத்தில் நடைபெற்றது.

 

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், முருகன், ஹெச்.ராஜா, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். காவல்துறையின் தடையையும் மீறி பா.ஜ.க.வினர் அக்கம் பக்க நகரங்களிலிருந்து சுமார் 3,000 பேர்கள் வரை திரட்டியிருந்தார்கள். தடை காரணமாக வெளியூரிலிருந்து வந்த வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கப்படவில்லை.

 

கூட்டத்தில் பேசிய பா.ஜ.க.வின் தலைவர் முருகன், “முருகக் கடவுளின் இந்த வேல் யாத்திரை எத்தனையோ இடர்பாடுகளைச் சந்தித்திருக்கிறது. அதை எல்லாம் தாண்டி பா.ஜ.க.வின் ஒவ்வொரு தொண்டனும் இந்த வேல் யாத்திரையை நடத்திக் காட்டியிருக்கிறார்கள். தமிழ் கடவுளை விமர்சித்த அந்தக் கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் தி.மு.க.வும் அதைச் சார்ந்த கூட்டணிக் கட்சிகளும் இருக்கின்றன. அந்த கருப்பர் கூட்டத்தை அடக்குவோம். எங்களின் உழைப்பு வீண் போகவில்லை. இதன் மூலம் அந்த கருப்பர் கூட்டத்திற்கும் கயவர் கூட்டத்திற்கும் ஆன்மீகப் பெரியோரும், பொது மக்களும், தொண்டர்களும் தக்கப் பாடம் கற்பிப்பார்கள். இந்த யாத்திரையில் பல கிலோ மீட்டர் கடந்து வந்திருக்கிறோம். இந்த வேல் யாத்திரை அவர்களுக்கு பாடத்தைக் கற்பித்தே தீரும்.” என்று பேசினார்.

 

ம.பி. முதல்வரான சிவராஜ் சிங் சவுகானோ, “மத்திய அரசு தமிழ்நாட்டுக்கான ஏராளமான திட்டங்களை அறிவித்திருக்கிறது. கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது. அந்தக் கூட்டணி தோல்வியைச் சந்திக்கும்” என்றார்.

 


 

 

சார்ந்த செய்திகள்