காடுவெட்டி குரு இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்ட கைது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கண்கலங்கினார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து எதிர்கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் நேற்று தடையை மீறி தூத்துக்குடி சென்றதற்காக கைது செய்யப்பட்டு, மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்.
இந்நிலையில் விழுப்புரம் போலீசார் இன்று தூத்துக்குடி சென்று மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவரை கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வேல்முருகன் திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வேல்முருகனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து வேல்முருகன் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், காடுவெட்டி குரு இறுதி நிகழ்ச்சியில் தங்களது கட்சியை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளும்படி அவரது தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். 25 ஆண்டுகாலம் ஒன்றாக எங்களோடு பயணித்த காடுவெட்டி குருவின் மறைவு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
காடுவெட்டி குரு இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த திட்டமிட்ட கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறிய அவர், மத்திய மாநில அரசுகளின் அராஜகப் போக்கு சட்டத்திற்கு புறம்பாக இந்த கைது சம்பவம் நடந்துள்ளது என்றார்.
இதனிடையே, மடப்பட்டில் வேல்முருகன் வந்த கார், போலீஸ் வாகனங்களை மறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.