அதிமுகவில் எந்த முடிவாக இருந்தாலும் அதை மோடிதான் தீர்மானிப்பார் என்றும், பாஜக பிடியில் இருந்து இனி அதிமுகவால் மீளவே முடியாது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் வியாழக்கிழமை (ஆக. 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது,
“நாடு முழுவதும் கரோனா பாதிப்புக்குள்ளாக மத்திய பாஜக அரசுதான் காரணம். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு கரோனா பரவும் அபாயம் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அப்போதே இந்தியாவில் விமான போக்குவரத்தை தடை செய்திருந்தால் இந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
கரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி பாஜக அரசு, தனது ஆர்எஸ்எஸ், மனுதர்ம கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. மின்சார திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்து, விவசாயிகளை பாதிப்படையச் செய்திருக்கிறது.
தமிழக முதல்வரும் மின்சார திருத்த சட்டத்தில் விதிவிலக்குதான் கேட்கிறாரே தவிர, ரத்து செய்யும்படி கோரவில்லை. தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக உடனே சட்டமன்றத்தை கூட்டி, சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது உதய் மின் திட்டம், நீட் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து வந்தார். இப்போது எடப்பாடி பழனிசாமி அரசு, தமி-ழக நலன்களையும் உரிமைகளையும் விட்டுக்கொடுத்து வருகிறது. பாஜக என்னும் பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையாக அதிமுக இருக்கிறது. இப்போது தலை மட்டும்தான் லேசாக தெரிகிறது. அதனால் இனி பாம்பின் வாயில் இருந்து மீள முடியாது.
திமுக தலைமையில் அமைந்துள்ளது மதச்சார்பற்ற கூட்டணி, கொள்கை ரீதியானது. எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 2 ஆண்டுக்கு முன்பே அறிவித்து விட்டோம். எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. மக்கள் பிரச்னைகளுக்காகவும், தமிழகத்தின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஒன்றிணைந்து போராடுகிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.
திமுகவுக்கு பாஜக போட்டி என்பதும் பகல் கனவு. பாஜகவுடன் உள்ள கட்சிகளை மக்கள் நிராகரிப்பார்கள். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி போன்றவர்களால் எல்லாம் அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்க முடியாது. அதிமுகவில் எந்த முடிவாக இருந்தாலும் அதை மோடிதான் தீர்மானிப்பார்.
வரும் 15ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவார். அடுத்த ஆகஸ்ட் 15ம் தேதி கோட்டையில் கொடி ஏற்ற மாட்டார். மக்கள் இ-பாஸ் நடைமுறையால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். அதனால் இ&பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.