தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் இரவோடு இரவாக சென்று மிரட்டி கைது செய்யும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் பல மாதமாக போராடி வந்த நிலையில், தமிழக அரசு துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் உயிரை பறித்தது. நூற்றுக்கணக்கானோர் தடியடி மற்றும் குண்டு காயங்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசு தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும், மக்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறிக்கொள்கிறது. மறுபுறத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பழி வாங்கும் நோக்கத்தோடு, அப்பாவி பொது மக்களையும், இளைஞர்களையும் இரவோடு இரவாக வீடு வீடாகச் சென்று மிரட்டியும், பயமுறுத்தியும், கைது செய்து வருகிறது.
தமிழக அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையால் தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புவதற்கு மாறாக மீண்டும் பதட்ட நிலை உருவாக்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
கைது படலத்தை உடனடியாக நிறுத்திட வேண்டும். தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும், தமிழக அரசும் உரிய கவனம் செலுத்த வேண்டுமென மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மே 26-ந் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவரது உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது.
பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.