கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது வி.இ.டி (தனியார்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வெளியில் இருந்தும், விடுதியில் தங்கியும் படித்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்தினுள்ளேயே பெண்கள் விடுதியும் அமைந்துள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் உடன் உதவி தலைமையாசிரியரே இரவில் மதுபோதையுடன், ஒலிப்பெருக்கியில் பாட்டை எழுப்பிகொண்டு குத்தாட்டம் போடுகின்றனர். இதனை பார்க்கும் மாணவ, மாணவிகள் இரவு நேரத்தில் வெளியே வருவதற்கு அச்சம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். மேலும் மாணவர்கள் தங்களின் பெயரை கேட்காதீர்கள் என்றும், ஆசிரியர்களுக்கு தெரிந்தால் செய்முறை தேர்வில் மதிப்பெண்ணை குறைத்துவிடுவார்கள் என்றும் கூறுகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று அறிவித்துள்ளது. ஆனால் ஆயுதபூஜைக்கு இன்று அரசாங்கம் விடுமுறை அளித்த நிலையில் 10, 11 மற்றும் 12 வகுப்பு படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் என்று கூறி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினர். இதேபோல் அரசு விடுமுறை நாட்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளிலும் தொடர்ந்து அரசு விதிமுறைகளை பொருட்படுத்தாமல் சிறப்பு வகுப்புகள் நடத்தபடுவதாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைவதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர் கதையாகி வரும் இப்பள்ளியின் சிறப்பு வகுப்புகளை கண்டு கொள்ளாத கல்விதுறை அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இரவில் மதுபோதையில் குத்தாட்டம் ஆடும் ஆசிரியர்கள், எவ்வாறு மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள்? பணத்தை கட்டிவிட்டோம் என்பதாலும், பொதுத்தேர்வு வருவதினாலும் எல்லாவற்றையும் சகித்து கொண்டுதான் போகிறோம் என்று பெண் பிள்ளைகளை பெற்று எடுத்த பெற்றோர்கள், என்ன செய்வது என்று தெரியாமல், திகைத்து வருகின்றனர். இதே பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதியில் தங்கி படித்த மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.