
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ‘கல்வி கூட்டமைப்புகளின் கம்பர்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டியின் நிறைவாக பரிசு வழங்கும் விழா நேற்று (12.04.2025) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “கம்பராமாயணத்தில் பெண்களை போற்றி இருக்கிறார்கள். ஆனால், இப்போது கம்பன் காட்டிய பாதையை அழிக்கிறார்கள். சனாதன தர்மத்தை மலேரியா, கொசுவுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். இப்படி பேசுவது என்பது கலாச்சார இனப்படுகொலை தான். ஆளுங்கட்சியில் ஓர் உயர் பதவியில் இருக்கும் அமைச்சர், பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசுகிறார்.
பெண்களை மட்டுமின்றி, சிவன் மற்றும் விஷ்ணுவை வணங்குபவர்களின் நம்பிக்கையை அவமதித்து பேசுகிறார். சர்ச்சையாக பேசியவர் தனிநபர் மட்டுமல்ல; இங்குள்ள சூழல் அமைப்பில் உள்ள ஒரு புள்ளிதான்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் 'ஜெய் ஸ்ரீ ராம்... ஜெய் ஸ்ரீ ராம்...' என மேடையில் முழக்கமிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கிருந்த மாணவர்களையும் 'ஜெய் ஸ்ரீராம்..' என கோஷமிட சொன்னார். ஆளுநர் சொன்னதை தொடர்ந்து மாணவர்களும் 'ஜெய் ஸ்ரீராம்..' என கோஷமிட்டனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் ஆளுநரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி,தான் பேசி முடித்ததும், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று மூன்று முறை கூச்சலிட்டதுடன், மாணவர்களையும் திரும்பச் சொல்லச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டப்படியான பொறுப்பில் உள்ள ஒருவர், அந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறான மதச்சார்பின்மைக்கு எதிராகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறார்; அதிகார வரம்பை மீறிச் செயல்படுகிறார்; ஆற்ற வேண்டிய கடமையைக் காலத்தே ஆற்றத் தவறுகிறார்; மாணவர்களிடம் மதவெறியைத் தூண்ட முயலும் கடைநிலை இந்துத்துவ வெறியராகவே வலம் வருகிறார்.
உச்சநீதிமன்றத்திடமிருந்து குட்டு வாங்கிய பிறகும், தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல், ஆர்.எஸ்.எஸ். கொள்கை அடிப்படையிலான தன் சொந்த விருப்பு வெறுப்புகளை ஆளுநர் என்ற பதவியைப் பயன்படுத்திச் செயல்படுத்திக் கொண்டிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. மாணவர்களிடம் மதவெறியைத் தூண்டுவதையும், சமூகநீதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதையும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அனுமதிக்கவே கூடாது. கல்வித் துறைக்கும் இவருக்கும் தொடர்பில்லை என்ற நிலை உச்சநீதிமன்றத்தாலேயே உறுதி செய்யப்பட்டுவிட்ட பிறகும், இவரை அழைத்து நிகழ்ச்சி நடத்துவோர் யார் என மக்கள் அடையாளம் காணவேண்டும். இத்தகைய மதவெறியர் ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டு மாணவர்களும், பொதுமக்களும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் நிலையைத் தவிர்க்க முடியாது என்பதை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.