நீர்நிலைகள் நல்லா இருந்தாதான் அந்த கிராமம் வளர்ச்சியடையும் என்பதை உணர்ந்த இளைஞர்கள் கடந்த ஆண்டு கஜா புயலுக்கு பிறகு நிலத்தடி நீரை உயர்த்த நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் அந்தந்த கிராம இளைஞர்கள் இணைந்தனர். அப்படி பேராவூரணி பகுதியில் இணைந்த இளைஞர்கள்தான் கைஃபா நண்பர்கள். பேராவூரணி பகுதியில் தங்கள் பணியை தொடங்கியவர்கள் பிறகு பட்டுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி தாலுகாக்களிலும் உள்ள தன்னார்வ இளைஞர்களுடன் இணைந்து பல வருடமாக சீரமைக்கப்படாத நீர்நிலைகளை சீரமைத்து இன்று தண்ணீரை நிரப்பி மகிழ்ந்துள்ளனர். இதற்காக இந்த இளைஞர்கள் பல லட்சங்களை இழந்து வேலைகளை துறந்தாலும் பல வருடங்களுக்கு பிறகு குளங்களில் தண்ணீர் நிறைந்திருப்பதைப் பார்த்து மனம் குளிர்ந்துள்ளனர்.
ஏரி, குளம், வாய்க்கால் வெட்டுவது மட்டும் நம் பணியல்ல வெட்டி குளங்களின் கரைகளில், குளங்களுக்குள் குருங்காடு என்று லட்டக்கணக்கான மரக்கன்றுகளையும் நட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர். நிலத்தடி நீரை சேமிக்கா மழைநீரை பழைய ஆழ்குழாய் கிணறுகளுக்கும் அனுப்பும் பணியையும் முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில்தான் தனி ஒருவராக கடந்த 40 வருடங்களாக தன் தங்கை பூரணம் வாங்கிக் கொடுத்த சைக்கிளில் ஊர் ஊராக தமிழகம் முழுவதும் சென்று மரம் வளர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி மரக்கன்றுகளை நட்ட சேந்தன்குடி கற்பகசோலை மரம் தங்கச்சாமி மறைந்தாலும் அவரது பெயரில் குருங்காடுகளை உருவாக்கிய கைஃபா நண்பர்கள் நவம்பர் 30 அவரது பிறந்தநாளில் பல கிராமங்களிலும் ஆயிரம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டு காலை 10 மணிக்கு கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் தொடங்கி மாலை பேராவூரணி பெரிய குளத்தில் முடித்தனர்.
கொட்டிய அடைமழையிலும் நனைந்து கொண்டே 10 கிராமங்களுக்கு சென்று உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து ஆயிரம் மரக்கன்றுகளையும் நட்ட பிறகே நிறுத்தினார்கள். இன்னும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதே லட்சியம் என்கிறார்கள் கைஃபா நண்பர்கள். பசுமை புரட்சி வெல்க..