சொந்த நாட்டிலிருந்து தப்பி சட்டவிரோதமாக இந்திய கடல் எல்லைக்குள் வந்த மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் காபர் தூத்துக்குடியில் தடுத்து நிறுத்தப்பட்டு , மத்திய, மாநில உளவு அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் டூப்ளிகேட் பாஸ்போர்ட் ஒன்று சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்ஜியா வகையிலான சிறு கப்பலான விர்கோ 9 கருங்கற்களை ஏற்றிக்கொண்டு தமிழர் ஒருவர் உட்பட இந்தோனோஷிய நாட்டினரை சேர்த்து மொத்தம் 9 பேருடன் தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவிற்கு புறப்பட்ட கப்பல், அங்கே கருங்கற்களை இறக்கி வைத்துவிட்டு திரும்ப வருகையில் கப்பலிலில் கூடுதலாக 1 நபர் சேர்த்து 10 நபர்களாக வருவதாக தகவல் கிடைக்க, நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டது அக்கப்பல். அந்த கப்பலில் சட்டவிரோதமாக பயணித்தது சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் காபர் என்ற தகவல் வெளியாக அனைத்து உளவு அமைப்புக்களும், குடியுரிமை அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர். தற்பொழுது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அக்கப்பலில் சட்டவிரோதமாக பயணித்த முன்னாள் துணை அதிபரை விசாரிக்க வெளிநாட்டினர் வருகைப்பதிவின் அதிகாரியான சேவியர் தன்ராஜ் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மாலத்தீவின் முன்னாள் அதிபரான அகமது அதீப் காபரின் பாஸ்போர்ட் "நக்கீரனுக்கு" பிரத்யேகமாய் கிடைத்துள்ளது. துணை அதிபரின் பாஸ்போர்ட் மாலத்தீவு அரசால் தற்பொழுது முடக்கப்பட்ட சூழலில் இந்த டூப்ளிகேட் பாஸ்போர்ட் இவருக்கு கிடைத்தது எப்படி..? தூத்துக்குடிக்கு வந்த இவர் இங்கிருந்து எங்கு செல்ல உள்ளார்.? இவருக்கு இங்கு உதவுவது யார்..? என்ற பல கேள்விகளுடன் உளவு அமைப்புக்கள் வட்டமிட்டு வருகின்றது.
இதே வேளையில், ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை, வாலி நோக்கம், கீழக்கரை, பெரியப்பட்டிணம் மற்றும் மரைக்காயர் பட்டிணம் உள்ளிட்டப் பகுதிகளில் இவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இலங்கை குண்டுவெடிப்பிற்கு பின் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதால் சர்வதேச அளவில் கவனம் பெறுகின்றது இந்த ஊடுருவல். இதனால் தமிழக கடற்கரையோரப்பகுதிகளில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.