Skip to main content

23 பேரை சுட்டுக்கொன்றதை கண்கூடாக பார்த்ததாக தெரிவிக்கின்றனர்: நான் தூத்துக்குடியில்தான் இருப்பேன்: டி.டி.வி.தினகரன்

Published on 25/05/2018 | Edited on 25/05/2018
T. T. V. Dhinakaran


ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது சசிகலாபுஷ்பா எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 
 

நாங்கள் மனு கொடுக்கத்தான் சென்றோம். அப்போது எங்களிடம் எந்தவொரு ஆயுதமும் இல்லை. அப்படி இருக்கும்போது போலீசார் குருவிகளை சுடுவது போன்று எங்களை சுட வேண்டிய அவசியம் என்ன? இதற்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உறவினர்கள் கேட்கின்றனர்.
 

தேவையில்லாத போலீசார் தூத்துக்குடியில் இருக்கும் வரை நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம் என பண்டாரம்பட்டியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒரு கோரிக்கை வைத்தார். அவர்கள் எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நாங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க சென்றபோதே வாகனங்கள் எரிந்து கொண்டிருந்தன. வாகனங்களுக்கு போலீசாரே தீ வைத்துவிட்டு, நாங்கள் வைத்ததாக கூறுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடித்தான் ஆக வேண்டும். நீங்கள் எங்களுடனே இருக்க வேண்டும் என்று கூறினர்.
 

23 பேரை சுட்டுக் கொன்று விட்டனர். இதனை நாங்கள் கண்கூடாக பார்த்தோம். இப்போது 12 பேரை சுட்டுக்கொன்றதாக கூறுகின்றனர். மற்றவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதுபற்றி விளக்கம் அளிக்கச் சொல்லுங்கள் என்று கேட்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் நீடிக்கும் என்று உருக்கமாக அந்த வாலிபர் கூறினார். துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும். அவர் விழாக்களில் கலந்து கொள்வதை விட்டு விட்டு தூத்துக்குடிக்கு வர வேண்டும். இங்குள்ள மக்களைவிட ஆட்சியாளர்கள், லண்டனில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். 
 

இந்த சம்பவம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி நேரடி விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும். போலீசார் தீவிரவாதிகள் போன்று நடந்து கொண்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் மக்கள் விடமாட்டார்கள். மக்களின் கட்டளைக்கு ஏற்ப காவல்துறை தூத்துக்குடியில் இருந்து வெளியேறும் வரை இங்குதான் இருப்பேன். மக்களின் நியாயமான கோரிக்கையான ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதுதான் இங்குள்ள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு. இவ்வாறு கூறினார். 
 

படம்: ராம்குமார்

சார்ந்த செய்திகள்