திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (மார்ச் 28) தமிழக முதல்வராகவுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யவுள்ளார். திருவண்ணாமலை நகரில் இரவு 8 மணியளவில் பிரச்சாரம் செய்ய எடப்பாடி வருகை தரவுள்ளதாக தெரிகிறது. இதற்காக திருவண்ணாமலை நகரில் தேரடி வீதியில் 40 அடி அகலத்தில் மேடையமைக்கப்படுகிறது.
தேரடி வீதி என்பது நகரத்தின் இதயம் போன்றது. இந்த சாலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 20 மணி நேரம் போக்குவரத்து இயங்கிக்கொண்டு இருக்கும். திருவண்ணாமலை நாடாளமன்ற தொகுதி முழுவதிலுமிருந்து அதிமுகவினரை திரட்டி வந்து உட்காரவைக்க போகிறார்கள் அதிமுக நிர்வாகிகள். இதனால் இன்றைய நாள் முழுவதும் இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்துவதால் நகரம் பெரும் சிரமத்துக்கு ஆளாகவுள்ளது. இது பற்றி காவல்துறை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிந்தும் எதனால் இங்கு கூட்டம் போட அனுமதி தந்தார்கள், ஆளும் கட்சின்னா எங்கே வேண்டுமானாலும் கூட்டம் நடத்த அனுமதி தருவார்களா என வேதனைப்படுகின்றனர் வியாபாரிகளும், ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்களும்.
அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை அமைச்சராக இருந்தபோது, லஞ்சம் வாங்கித்தரவில்லை என்பதற்காக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கொடுத்த டார்ச்சரால் வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியே வந்த அக்ரிக்கு எப்படி சீட் தரலாம் என்கிற சர்ச்சை அதிமுகவிலேயே எழுந்துள்ளது.
இந்நிலையில் அந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்காக பிரச்சாரம் செய்ய வரும் எடப்பாடி, மக்களை, வியாபாரிகளை வதைக்கும் வகையில் முக்கிய சாலையில் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்து இருப்பது அரசியல் சாராதவர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் பொதுக்கூட்டமோ, தேர்தல் கூட்டமோ நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த வாரம்கூட அப்படியொரு தீர்ப்பை வழங்கியது. ஆனால், இதனை அரசியல் கட்சிகளும் கண்டுகொள்வதில்லை, ஆட்சியாளர்களும் கண்டுகொள்வதில்லை, தேர்தல் ஆணையமும் கண்டுகொள்வதில்லை என்பது தெரிகிறது.