பல தடைகளை கடந்து உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் விருப்பமனு வாங்கிய பிரதான கட்சிகள் ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட தேர்தல் செலவுக்கு என்று ரூ 10 லட்சம் முதல் ரூ 15 லட்சம் வரை வைத்திருப்பவர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதாக சொல்லி வருகின்றனர்.
![Councilor's seat Rs 10 lakh ... DMK complains](http://image.nakkheeran.in/cdn/farfuture/vHlUnogLDugkjRMFEGdgzige91cSShdbfCNobuy2ZvA/1576327564/sites/default/files/inline-images/IMG-20191213-WA0122.jpg)
இந்தநிலையில்தான் ஆளுங்கட்சியில் வேட்பாளராக ரூ.15 கேட்பதாக வாய்ப்பு கேட்டவர்கள் ரகசியமாக கட்சி தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர். ஆனால் புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் பகிரங்கமாகவே மாஜி எம்.எல்.ஏ ஆலவயல் சுப்பையா, திமுக தெற்கு மா.செ (பொறுப்பு) ரகுபதி எம்.எல்.ஏ மீது கட்சி தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த புகார் மனுவில், புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி 12 வது வார்டில் போட்டியிட எனது மகன் முரளிதரன் விருப்ப மனு கொடுத்திருந்தார். நேர்காணல் முடிக்கப்பட்டு சீட் ஒதுக்கும் நிலையில் தெற்கு மா.செ ரகுபதி ரூ.10 லட்சம் கேட்டார். கொடுத்தால்தான் சீட் என்று கூறி மற்ற தேர்தல் செலவை நீங்களே ஏற்க வேண்டும் என்றும் டிமாண்ட் வைத்துள்ளார். அதனால் கட்சித் தலைமை எனது மகனுக்கு சீட் ஒதுக்கித்தர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதம் சமூகவலைதளங்களிலும் பரப்பிவிடப்பட்டது. அதன் பிறகு பேசிய மா.செ தரப்பிடம் முரளிதரன் பேசும் போது, அப்பா தான் புகார் அனுப்பச் சொன்னார் அனுப்பியாச்சு என்று பதில் சொல்லிவிட்டார். இந்நிலையில் மா.செ ரகுபதி எம்.எல்.ஏ தரப்பில் ரகுபதி ரூ.10 லட்சம் கேட்கவேண்டிய நிலையில் இல்லை. அந்த புகார் அவதூறானது. உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு கட்சி நடடிக்கை எடுக்கும் என்று கூறுகின்றனர்.