ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் ஒரு நபர் ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி, பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா தனது வாக்குமூலத்தை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். ஆனால், சசிகலா சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதில் இழுத்தடிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய ஜெயலலிதாவின் மரண வழக்கில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 7 நாள் அவகாசம் கோரப்பட்டிருந்தது. கால அவகாசம் கோரி சசிகலா அளித்த மனுவை விசாரணை ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.
பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு அல்லாமல், ’’பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யாமல் தொடர்ந்து விசாரணையை தாமதப்படுத்துகிறது சசிகலா தரப்பு. சசிகலா பதிலளிக்க இதுவரை 5 முறை அவகாசம் கொடுக்கப்பட்டும் சசிகலா தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை . பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யாவிடில் சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்தப்படும். சசிகலாவுக்கு எதிராக முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்’’ என்று நீதிபதி ஆறுமுகசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.