Skip to main content

“பிப்ரவரி 18இல் கண்டன ஆர்ப்பாட்டம்” - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Published on 12/02/2025 | Edited on 12/02/2025

 

Condemnation struggle on February 18 Edappadi Palaniswami announcement

பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய  திமுக அரசைக் கண்டித்தும்; குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும், அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டில் திமுக அரசு பதவியேற்றதில் இருந்து, பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதே போல், கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக, தமிழ் நாட்டில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது. திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, பள்ளி, கல்லூரி முதல் பல்கலைக்கழகம் வரை, அனைத்து இடங்களிலும் மாணவிகளுக்கு எவ்வித அச்சமும் இன்றி சர்வ சாதாரணமாக பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் மிகுந்த அச்சமும், கவலையும் அடைந்துள்ளனர். இந்த அவல நிலைக்குக் காரணமான திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு, பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும்; குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும், அதிமுக மாணவர் அணியின் சார்பில் பிப்ரவரி 18ஆம் (18.02.2025) தேதி செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக மகளிர் அணிச் செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; அதிமுக மாணவர் அணிச் செயலாளர் சிங்கை ஜி. ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெறும். திமுக  அரசைக் கண்டித்து நடைபெற உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்