
பிரிந்து கிடந்த அதிமுக - பா.ஜ.க கூட்டணி 2026ஆம் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக மீண்டும் சேர்ந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு, அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இதனால், மீண்டும் அதிமுக - பா.ஜ.க கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், மக்கள் பிரச்சனை எடுத்து சொல்வதற்காகவே அந்த சந்திப்பு நடந்தது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதனையடுத்து, நேற்று முன் தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தவுடன், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவி மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த கூட்டணி அறிவிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்பட அனைத்து கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் பா.ஜ.க - அதிமுக கூட்டணி அறிவிப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு. அதை பற்றி நாங்கள் கருத்து சொல்ல முடியாது. கடந்த மக்களவைத் தேர்தலில், அதிமுகவுடன் தான் கூட்டணியில் இருந்தோம். ஆனால், 2026ஆம் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் 1 வருட காலம் இருப்பதால் எங்கள் கட்சி வளர்ச்சியை மட்டும் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். எந்த கூட்டணிக்கு போகிறோம், யாருடன் கூட்டணியில் இருக்கிறோம் என்பது குறித்தெல்லாம் நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. எங்களிடம் யாரும் கலந்து ஆலோசிக்கவும் இல்லை, நாங்களும் யாருடனும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.