தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு மிகப்பெரிய சரித்திரம் உள்ளது என தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
ஆரோவில் வளர்ச்சிக்குழு கூட்டம், அரவிந்தரின் 150 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் காணும்பொங்கல் விழா ஆகியவை புதுவை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குப் பின் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “துணைநிலை ஆளுநர்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் முதல்வர்கள் இதைச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களின் பொறுப்பு என்ன என்பதை முதல்வர்கள் புரிந்து கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆளுநராக இருந்தாலும் துணைநிலை ஆளுநராக இருந்தாலும் அவர்கள் நேர்மையாக செயல்பட்டாலும் கூட சில விவாதங்கள் வந்து விடுகிறது. அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.
தமிழகத்திற்கும் தமிழ்நாட்டிற்கு அதிகமான மாறுபாடுகள் இல்லை. ஆனால், தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு மிகப்பெரிய சரித்திரம் உள்ளது. கடுமையான போராட்டங்களுக்குப் பின் தமிழ்நாடு என்னும் பெயர் நமக்கு கிடைத்துள்ளது. அவ்வளவு இலகுவாக தமிழ்நாடு என்ற பெயரைப் புறந்தள்ளிவிட முடியாது.
சரியான கருத்தை யார் சொன்னாலும் ஏற்றுக்கொண்டு, தவறு என்றால் சுட்டிக்காட்டியதிலும் நான் தவறியதில்லை” எனக் கூறினார்.