சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மே மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்த நிலையில், 4 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தரராஜ், சூலூர் தொகுதியில் கே.சுகுமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் மகேந்திரன், அரவக்குறிச்சி தொகுதியில் சாகுல் ஹமீது ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் மகேந்திரனின் பெற்றோர் இருளாண்டித்தேவர்-சந்திரா (இருவரும் அரசு ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்).
. மகேந்திரனுக்கு மூன்று தம்பிகள். ஒரு தங்கை உள்ளனர். 20-04-1965ல் பிறந்த மகேந்திரன், உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மேனிலைப்பள்ளியில் படித்தார். பின்னர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் B.com படித்தார். இவருக்கு ஜெயப்பிரியா என்ற மனைவியும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.
1983 முதல் அதிமுகவில் உறுப்பினராகவும், அதனை தொடர்ந்து அம்மா பேரவையின் மாவட்ட இணைச்செயலாளராகவும் பணியாற்றினார். டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டபோது அதனை கண்டித்து உசிலம்பட்டியில் மிகப்பெரிய கண்டன ஆரப்பாட்டத்தை நடத்தினார். தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார்.
2001 முதல் 2006 வரை உசிலம்பட்டி நகராட்சி தலைவராகவும், 2006 முதல் 2011 வரை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.