கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் பாஜக தலைவர்கள் செருப்புக்காலோடு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்ததால் தலித் அமைப்புகள் பாலாபிசேகம் செய்து சுத்தம் செய்த நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏப்ரல் 14 ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளன்று கர்நாடகா பாஜக தலைவர்கள் சிலர் பிரகலாத் ஜோஷி எம்.பி. தலைமையில் செருப்புக்காலோடு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அவர்களை மன்னிப்புக் கேட்கும்படி தலித் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. ஆனால், அவர்கள் மன்னிப்புக் கேட்க மறுத்தனர். இதையடுத்து ஒரு டேங்கர் லாரியில் தண்ணீரை வரவழைத்து சிலையையும் சிலை இருக்கும் வளாகத்தையும் சுத்தம் செய்தனர். பின்னர், 101 லிட்டர் பாலை ஊற்றி சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
வழக்கமாக சிலை தீட்டுப்பட்டுவிட்டது என்று பாஜகவினர்தான் மற்றவர்களை அவமானப்படுத்துவார்கள். இப்போது, தலித் அமைப்புகளே பாஜக தலைவர்களை அவமானப்படுத்தும் வகையில் இதைச் செய்திருப்பது கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.