தமிழகத்தில் திமுக ஆட்சியில் 2006 -2011 ம் ஆண்டு வீடு தோறும் இலவச கலர் டிவி வழங்கினார். 2011 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மீதம் இருந்த டிவிக்களை அரசு மருத்துமனை மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சியில் மீதம் உள்ள கலர் டிவிகளை பள்ளிகளுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளனர். திருச்சி மேற்கு தொகுதியில் இருந்த குடோனில் இருந்து திருச்சியில் உள்ள 77 அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர்களை வரழைத்து கொடுத்தனர். இதில் பல டிவிகளின் அட்டை பெட்டிகள் கிழிந்து இருந்தது. 9 ஆண்டுகள் கழித்து பள்ளிகளுக்கு ஏன் கொடுக்க வேண்டும். அவை தற்போது நல்லமுறையில் இயங்குமா? என்கிற கேள்வி எழுகிறது.
அதே நேரத்தில் பள்ளியில் மாணவர்கள் பார்பதற்கோ அல்லது பாடங்கள் எடுப்பதற்கோ இந்த டிவிகளை பயன்படுத்த முடியாது. அங்கு பெரிய அளவில் உள்ள எல்ஈடி டிவிக்கள் தான் தேவைப்படும். அதுவும் 9 ஆண்டுகள் கழித்து இந்த டிவிகளை கொடுப்பது எந்த விதத்திலும் பலன் அளிக்காது என்கிறார்கள்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, பயனாளிகளுக்கு போக மீதம் இருந்த டிவிகள் அரசு பள்ளிக்கு கொடுக்க சொல்லி உத்தரவு வந்துள்ளது. இந்த நேரத்தில் ஏன் கொடுக்க சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றார்.
கரோனா காலத்தில் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு செல்போனில் படிக்கிற அளவிற்கு வசதியும், அதற்கான பயிற்சியும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். ஒரு வேளை அதற்கான ஏற்பாடாக இருக்குமோ என்கிறார்கள். அதிமுக ஆட்சில் அரசு பள்ளிகளுக்கு கலைஞரின் இலவச கலர் டிவி கொடுப்பது என்பது ஆச்சியமான அதிசியம் தான்.