![CM mk stalin criticism The voice of EPS is just a dubbing voice for BJP](http://image.nakkheeran.in/cdn/farfuture/2jxKiTrExvLPYPQxjwwWM24-lTgEK-Wu4M2bAPx7JTY/1739599216/sites/default/files/inline-images/mks-ungalil-oruvan-art-1.jpg)
உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளங்கள் வாயிலாகக் கேள்விகளுக்குக் காணொளி வாயிலாகப் பதிலளித்து வருகிறார். அந்த வகையில் இன்று (15.02.2025) அப்பா எனும் பொறுப்பு, அற்ப சிந்தனை என்று சொல்லும் மத்திய ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?, கல்விக்காக நிறையச் செய்ய வேண்டும், கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடா?, டப்பிங் வாய்ஸ் பழனிசாமி, பாலியல் குற்றங்கள், உணவு மற்றும் உடற்தகுதி, வெளி மாவட்டப் பயணங்கள் மற்றும் பற்றி எரிந்த மணிப்பூர் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக கல்வி, குறிப்பாகப் பெண்களுக்கான கல்வி குறித்து தொடர்ச்சியாகப் பேசுகிறீர்கள். நிறைய திட்டங்களையும்அறிவிக்கிறீர்கள் இந்த 4 ஆண்டுகளில் என்ன மாற்றத்தைஉணர்ந்திருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், “ ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததில் இருந்து கல்விக்காகநிறைய செய்து கொண்டு இருக்கிறோம். கல்விதான் யாராலும்திருட முடியாத சொத்து... ஒருவரின் கல்வி அவரின் தலைமுறையையே முன்னேற்றிவிடும் என்று தொடர்ந்து மாணவர்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். அதனால்தான், காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என்று, நிறைய திட்டங்களைச் செய்கிறோம்.
குறிப்பாகப் பெண்களுக்குக் கல்வியறிவு கிடைக்க வேண்டும் என்று ஏராளமான திட்டங்களைச் செய்து கொண்டு இருக்கிறோம். இதனால் ஏராளமானவர்கள் பயனடைந்து கொண்டு இருக்கிறார்கள். பயனடைந்த பலபேர் பேசும் வீடியோக்களை நீங்களேகூட பார்த்திருப்பீர்கள். இந்த திட்டங்களால் முன்னேறியவர்கள், எனக்குக் கடிதம் எழுதுகிறார்கள். அதேபோல, நான் கொடுக்கும் பணி நியமன ஆணைகள் பெரும்பாலும் பெண்களுக்கானதாக இருப்பதை பார்த்து நான் பெருமை அடைகிறேன். கல்விக்காக இன்னும் அதிகம் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.
கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்? முரண்கள் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, “கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை நான் ஆலோசனையாகத்தான் பார்க்கிறேன். முரண்பாடாக நினைப்பதில்லை. ஒரு குடும்பத்தில், பணிபுரியும் அலுவலகத்தில், அனைத்து இடத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். கருத்து சொல்வது, ஜனநாயகப்பூர்வமான உறவின் அடையாளம்தான். 2019இல் இருந்து ஒன்றாகச் சேர்ந்து தேர்தல் களத்தைச் சந்தித்துக் கொண்டு வருகிறோம். பா.ஜ.க.வை எதிர்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருப்பது தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான். கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்தப் பாதிப்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
![CM mk stalin criticism The voice of EPS is just a dubbing voice for BJP](http://image.nakkheeran.in/cdn/farfuture/nBsboKanVA4QsCV5q67UUKbWvyk9BXdLqqCaNhCU83A/1739599241/sites/default/files/inline-images/eps-art-2_5.jpg)
டெல்லி முடிவுகள் இந்தியா கூட்டணிக்குச் சம்மட்டி அடி என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்லியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு, “நான் ஏற்கனவே சொன்னதுதான்... பழனிசாமியின் அறிக்கைகளைப் பார்த்தால், பா.ஜ.க.வின் அறிக்கைகள் போன்றுதான் இருக்கும். அவருடைய குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான். நாம் “கள்ளக் கூட்டணி” என்று சொல்வதை நிரூபிக்கிறார் பழனிசாமி. அவ்வளவுதான்! இதையெல்லாம் பேசுவதற்கு முன், அவர் தன்னுடைய தோல்விகளைப் பற்றியோசித்துப் பார்க்க வேண்டும்” எனப் பதிலளித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நிறைய செய்திகள் இப்போது வருகிறதே என்ற கேள்விக்கு, “பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்கிறோம். பாலியல் குற்றங்களுக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் வழங்குவதற்குச் சட்டமன்றத்தில் நானே சட்டம்கொண்டு வந்திருக்கிறேன். சிறப்பு நீதிமன்றங்கள் கொண்டு வந்திருக்கிறோம்; விரைவாக தண்டனை வாங்கிக் கொடுக்கிறோம். பாலியல் குற்றங்கள் செய்பவர்கள், அவர்கள் வீட்டில் இப்படியொரு குற்றம் நடந்தால் எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.