![Chief Minister Stalin letter to dmk party members](http://image.nakkheeran.in/cdn/farfuture/_hw_o7asMZMX24M7IwxQNrfaNfBaTIP8aZrJRqXZejs/1739532043/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_270.jpg)
இந்தியாவின் முதன்மை முதலமைச்சர் என்பதைவிட இந்தியாவின் முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை எல்லாத் துறைகளிலும் எட்டுவதே நமது இலக்காகும். அந்த இலக்கை அடைவதற்கு ஏழாவது முறையும் தி.மு.க.வின் ஆட்சி தொடரவேண்டும் என திமுக உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்குத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆதரவு வெற்றியாய் எதிரொலிக்க உங்களில் ஒருவனான நான் நம்புவது உடன்பிறப்புகளான உங்களின் உழைப்பைத்தான். அந்த உழைப்பே தி.மு.க.வை ஆறாவது முறையாக ஆட்சிக்குக் கொண்டு வந்தது.
ஆட்சியில், மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிவித்து, அதனை முழுமையாகச் செயல்படுத்திடும் வகையில் அயராமல் உழைக்கின்ற காரணத்தினால்தான் மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது. உடன்பிறப்புகளின் உழைப்பும் பொதுமக்களின் ஆதரவும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏழாவது முறையாகக் கட்சியை ஆட்சியில் அமர்த்தும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வழங்கிய ஆட்சியை அவர்களுக்கான ஆட்சியாக நாம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நமது திராவிட மாடல் அரசு பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற இலட்சிய நோக்கத்துடன் நமது திராவிட மாடல் அரசு செயலாற்றி வரும் நிலையில், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நமக்குரிய நிதியை வழங்காமல் தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. மாநில உரிமைக்கு எதிரான பா.ஜ.க அரசின் பழிவாங்கும் போக்கையும் எதிர்கொண்டு இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்.
ஒன்றிய அரசின் நிறுவனங்களும், நிதி ஆயோக் போன்ற அமைப்புகளும் வெளியிடும் புள்ளிவிவரங்களில் தமிழ்நாடு பல்வேறு இலக்குகளில் சிறந்து விளங்குகிறது. அப்படியிருந்தும் நமக்குரிய நிதிப் பங்களிப்பு கிடைக்கவில்லை. நமக்கான திட்டங்களை பா.ஜ.க. அரசு முன்னெடுப்பதில்லை. தமிழ்நாட்டை பா.ஜ.க. வஞ்சித்தாலும், தி.மு.க மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் திராவிட மாடல் அரசின் நலத் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயனளித்து வருகின்றன.
இந்தியாவின் முதன்மை முதலமைச்சர் என்பதைவிட இந்தியாவின் முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை எல்லாத் துறைகளிலும் எட்டுவதே நமது இலக்காகும். அந்த இலக்கை அடைவதற்கு ஏழாவது முறையும் தி.மு.க.வின் ஆட்சி தொடரவேண்டும்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில், அ.தி.மு.க. ஆட்சியில் பின்னோக்கித் தள்ளப்பட்ட தமிழ்நாட்டை மீட்டு, வலிமையும் செழிப்புமிக்க மாநிலமாக மாற்றிடுவதற்கான தி.மு.க.வின் 7 அம்சத் திட்டங்களை வெளியிட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கு 10 ஆண்டுகள் தேவை என்பதைக் குறிப்பிட்டு, அந்த வாய்ப்பைத் தி.மு.க.வுக்கு வழங்குங்கள் என்று கேட்டேன். முதல் 5 ஆண்டுகாலத்தை நம்பிக்கையுடன் வழங்கிய மக்கள், நமது திராவிட மாடல் ஆட்சியின் திறன்மிகு நிர்வாகத்தையும், சிறப்பான திட்டங்களையும் உணர்ந்து தொடர்ச்சியான வாய்ப்பை வழங்கிடத் தயாராக இருக்கிறார்கள்.
தி.மு.க.வுக்கு நல்வாய்ப்பு அமைகிறதென்றால் அதனைக் கெடுப்பதற்கான சதிகளைச் செய்யும் அரசியல் சக்திகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகமூடியுடன் வெளியே வரும். தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான, தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனுமில்லாத, கள்ளக் கூட்டணி வைத்திருக்கிற, காசு வாங்கிக் கொண்டு கூவுகிற அந்த முகமூடிகளைக் கிழித்தெறிந்து கழகத்தின் தலைமையிலான அணியின் வெற்றியை உறுதி செய்வோம்.
அந்த வெற்றியை அடைவதற்கான நிர்வாக வசதிக்காகத்தான் மாவட்டக் கட்சி நிர்வாகத்தில் மாற்றங்கள் தொடங்கியுள்ளன. திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளராக மு.அப்துல் வகாப் எம்.எல்.ஏ., திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக பழனிவேல், நீலகிரி மாவட்டக் கழகப் பொறுப்பாளராக கே.எம்.ராஜு, ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுபோலவே ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான மாவட்டப் பொறுப்பாளர்களாக அமைச்சர் சு.முத்துசாமி, அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அமைச்சர் பி.மூர்த்தி, செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ, க.செல்வராஜ் எம்.எல்.ஏ., டாக்டர்.ஆர்.லட்சுமணன் எம்.எல்.ஏ., .கோ.தளபதி எம்.எல்.ஏ., என்.நல்லசிவம், தோப்பு வெங்கடாசலம், கௌதமசிகாமணி, இல.பத்மநாபன், என்.தினேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்களின் பொறுப்பிலான சட்டமன்றத் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சட்டமன்றத் தேர்தலுக்கு ஓர் ஆண்டுகாலமே இடையில் உள்ளதால் அதற்கேற்ப களப்பணிகள் அமைந்திட வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றங்களும் அதற்கேற்ற வகையிலான நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோல இன்னும் சில அறிவிப்புகளையும் உடன்பிறப்புகள் எதிர்பார்க்கக்கூடும்.
உங்களில் ஒருவனான என்னைப் பற்றி கட்சி நிர்வாகிகள் நன்கறிவீர்கள். ஒரு பொறுப்பிலிருந்து ஒருவரை மாற்றுவது குறித்து ஒன்றுக்கு நூறு முறை யோசித்து, தலைமைக் கட்சி நிர்வாகிகளுடன் பல சுற்றுகள் ஆலோசித்து, கழகத்தின் நன்மை கருதியே இறுதி முடிவெடுப்பேன். இப்போதும் அப்படித்தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் நலன் கருதி இத்தகைய முடிவுகள் தொடரும். இயக்கம் என்பது தேவைக்கேற்ற மாற்றங்களுடன் இயங்கிக் கொண்டிருந்தால்தான், காலத்திற்கேற்ற வளர்ச்சியைப் பெற முடியும். இந்த மாற்றங்களினால் கட்சியில் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களுக்கும் புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவர்களுக்கும் என் இதயத்தில் நிறைந்துள்ள அன்பில் அணுவளவும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. எப்போதும் போல நாம் எல்லோரும் கலைஞரின் உடன்பிறப்புகள்தான்.
முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் தற்போது பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கடமையாற்ற வேண்டும். புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவர்கள், ஏற்கனவே பொறுப்பில் உள்ளவர்களை அரவணைத்து, மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக் கழகங்கள் வரை எல்லாரையும் ஒருங்கிணைத்துச் செயலாற்றிட வேண்டும்.
இருநூறு தொகுதிகள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியினை உறுதி செய்யும் வகையில், களத்திற்கேற்ற வியூகம் அமைத்து, வெற்றிப் பாதையில் பயணிப்பதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது களையெடுப்பு அல்ல, கட்டுமானச் சீரமைப்பு. தி.மு.க எனும் 75 ஆண்டுகால இயக்கத்தின் உறுதிமிக்க கட்டுமானம் மேலும் வலிவுடனும் பொலிவுடனும் திகழ்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு நடவடிக்கை.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், உடன்பிறப்புகளின் உழைப்பு எனும் அடித்தளத்தில் இன்றளவும் வலிமையாகத் திகழ்கிறது. அதனால் நம் எதிரிகளின் கண்களை உறுத்துகிறது.
முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையிலும் செயலிலும் உருவான கழகத்தின் கற்கோட்டையான அறிவாலயத்திலிருந்து செங்கல்லை உருவலாம் எனக் கனவு காண்பவர்கள் தரையில் விழுந்து தலையில் அடிபட்டபின், கனவு கலைந்து விழித்துக் கொள்ளலாமே தவிர, அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமை மிக்க வரலாறு.
தமிழ்நாட்டு மக்கள் மனதில், குறிப்பாகப் பெண்கள் - இளைஞர்கள் ஆகியோரிடம் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கொள்கைக் கூட்டணியினரான தோழமைக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி முத்திரை பதிப்பதைத் தடுக்க முடியாது என்பது அரசியல் எதிரிகளுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான் கள்ளக்கூட்டணி, திரைமறைவுக் கூட்டணி, வாக்கைச் சிதறடிக்க நினைக்கும் கூட்டணி என நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும் களம் நமதே! மக்களின் ஆதரவு நம் பக்கமே! மக்களுக்குத் துணையாக நிற்போம்! கவனமாக உழைப்போம்! வெற்றி நமதே” என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.