![puducherry school girl issue 18 fishing villagers gathered together](http://image.nakkheeran.in/cdn/farfuture/Xfz0OQVn6ua9Du8mGYc1rUnUAdHD3ttTavzkTtNH61Q/1739606117/sites/default/files/inline-images/py-pro-art.jpg)
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்டது தவளக்குப்பம் என்ற பகுதி. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சிறுமி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து சிறுமியின் உறவினர்களும் பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர். அதோடு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் கொடுத்தும் வழக்குப்பதிவு செய்யவில்லை. விசாரணை நடத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பள்ளியின் உரிமையாளர் அரசியல் கட்சிக்கு நெருக்கமாக இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் காவல் துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர் எனச் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில் தான் தனியார் பள்ளியில் புகுந்து பொதுமக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சம்பந்தப்பட்ட பள்ளியை சீலிட்டு மூட உத்தரவிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பள்ளியை மூடி சீல் வைக்க உத்தரவிட்டுள்ளோம். பள்ளியின் மேனேஜ்மென்ட் மீது சரியான நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இது போன்ற சம்பவம் மீண்டும் புதுச்சேரியில் நடக்காமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அரசின் சார்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தான் புதுவையில் உள்ள ஒட்டுமொத்த மீனவ கிராமங்களும் ஒன்று திரண்டு இந்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றி அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்துள்ளனர்.
அதில், “புதுவையில் இந்த சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம் போன்று மற்ற சிறுமிகளுக்கும் ஏற்படக்கூடாது. அதற்கான சட்ட திட்டங்களைப் புதுவை மாநில அரசு கொண்டுவர வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க விட்டால் புதுச்சேரி முழுவதும் போராட்டம் நடத்துவோம்” எனக் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.