Skip to main content

இளைஞர்களை மோகினி போல மயக்கி, கவர்ந்து... இனியும் தாமதம், அலட்சியம் கூடாது! -ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 30/07/2020 | Edited on 30/07/2020
ramadoss

 

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகி, பணம், நிம்மதி உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியும், உயர் நீதிமன்றம் ஆணையிட்டும் கூட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது.

 

சென்னை அண்ணாநகரை அடுத்த டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பல்லாயிரக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்ததால், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவர் கல்லூரியில் படிக்கும் போதே பகுதிநேரமாக அந்த பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி பல்லாயிரக் கணக்கான ரூபாயை சேமித்து வைத்துள்ளார். படிப்பிலும் சிறந்து விளங்கியுள்ளார். ஆனால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சில வாரங்களிலேயே தமது சேமிப்புப் பணம் முழுவதையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார். அதுமட்டுமின்றி தாம் பணியாற்றி வந்த நிறுவனத்திலிருந்தும் ரூ.20,000 பணத்தை எடுத்து சூதாட்டத்தில் இழந்துள்ளார். ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறி போனதால் சமாளிக்க முடியாத அம்மாணவர், வேறு வாய்ப்பு இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

நன்கு படித்து எதிர்காலத்தில் சமுதாயத்தின் அனைத்து மரியாதைகளுடன் வாழ்ந்திருக்க வேண்டிய  ஒரு இளைஞரை, ஆன்லைன் சூதாட்டம் என்ற அரக்கன் பலிகொண்டிருக்கிறான். சென்னையில் தற்கொலை செய்து கொண்ட 20 வயது மாணவர்தான் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முதல் உயிரிழப்பு என்று கூற முடியாது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமானவர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். அவற்றில் ஆயிரத்தில் ஒரு நிகழ்வு மட்டும் தான் வெளியுலகிற்கு தெரியவருகிறது. மீதமுள்ள தற்கொலைகள் வெளியுலகிற்கு கொண்டு வரப்படுவதில்லை.

 

ஆன்லைன் சூதாட்டம் என்பது சாதாரணமான தீமை அல்ல. அது இளைஞர்களை மோகினி போல மயக்கி, கவர்ந்து, அரக்கனைப் போல அழிக்கும் திறன் கொண்டது. போதாக்குறைக்கு ஆன்லைன் ரம்மி குறித்து இணையதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் கவர்ச்சியான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. ஆன்லைன் ரம்மி ஆடினால், முதலீடு செய்யும் பணத்தை விட 9 மடங்கு வரையிலான பணத்தை 3 நிமிடங்களில் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டப்படுகிறது. அவற்றால் கவரப்பட்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் அதன்பின் வாழ்க்கையில் மீள்வதே இல்லை. பலர் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்து விடுகின்றனர்; சிலர் உயிரையே இழந்து விடுகின்றனர்.

 

17 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தலைவிரித்தாடிய பரிசுச்சீட்டு கலாச்சாரத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. பாட்டாளி மக்கள் கட்சி தான் தொடர்ச்சியான போராட்டங்களால்  அந்தக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டியது. அதேபோல், இப்போது ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால் இளைஞர் சமுதாயத்தை சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியாது.


ஆன்லைன் சூதாட்டத்தின் தீமைகளை எடுத்துக் கூறி, அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், மத்திய அரசோ, மாநில அரசோ இந்த கொடுந்தீமைக்கு முடிவு கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

 

ஆன்லைன் சூதாட்டங்களின் தீமைகள் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது. அது சரியான நேரத்தில் வழங்கப்பட்ட மிகச்சரியான தீர்ப்பு ஆகும். தெலுங்கானா மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில், அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

 

அதேபோல், தமிழ்நாட்டிலும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதமோ, அலட்சியமோ காட்டக்கூடாது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான வாய்ப்பு இருந்தால், அதை செயல்படுத்துவதற்காக புதிய சட்டம் இயற்றுவது குறித்தும் மத்திய அரசு ஆராய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்