Skip to main content

“வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவதா?” - இ.பி.எஸ். கடும் கண்டனம்!

Published on 15/02/2025 | Edited on 15/02/2025

 

Does the police write the verdict before investigating the case EPS Strongly condemns

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் அருகே முட்டம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை மற்றும் மூவேந்தன் என்ற 3 பேரும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய விற்பனை தடுப்பு நடவடிக்கை நடைபெற்றது. அப்போது ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நேற்று (14.02.2025) ராஜ்குமார் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து சாராய விற்பனை செய்துள்ளார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது தினேஷ் என்ற சிறுவன், “தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள்?” எனக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் சிறுவனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஹரிஷ் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த மாணவன் ஹரிசக்தியும் நேற்று மாலை தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இந்த வாக்குவாதத்தைத் தடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகளான ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் ஹரிஷ், ஹரிசக்தி ஆகிய இருவரையும் சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் இந்த இளைஞர்கள் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த படுகொலை குறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாராய வியாபாரிகள் 3 பேரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர். அதே சமயம் படுகொலை செய்யப்பட்ட உடலை வாங்க மறுத்து இளைஞர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போலீசார் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிததனர். இதனை ஏற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், இருவரின் உடல்களையும் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள், சாராய வியாபாரிகளான ராஜ்குமார், மூவேந்தன் ஆகியோர் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவமும் அரங்கேறியது. அதே சமயம் இந்த சம்பவத்துக்கு முன்விரோதமே காரணம் என மயிலாடுதுறை  மாவட்ட காவல் துறை சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. அதாவது சாராய வியாபாரத்தைத் தட்டிக் கேட்டதால் இருவர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. முன்விரோதம் காரணமாக தினேஷ் என்பவரை மதுபோதையில் மூன்று பேர் தாக்க முயற்சி செய்துள்ளனர். இதனைத் தடுக்க வந்த தினேஷின் நண்பர்கள் ஹரிஷ், ஷரி சக்தி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனக் காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Does the police write the verdict before investigating the case EPS Strongly condemns

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் அன்ஷேப் மாடல் (Unsafe Model) அரசை நடத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை.

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா?. இதில், இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, இந்த கொலை வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது எனப் பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா?. இளைஞர்கள் கொலையின் காரணத்தைத் தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன். விளம்பரங்களில் மட்டும் இருக்கும் கவனத்தை, மக்கள் பணியில் சிறிதாவது செலுத்துமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினைக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்