![CM concern central govt continues to deceive](http://image.nakkheeran.in/cdn/farfuture/-QHt1hrco1Zk65kCjeMt2aBI78tieAN5HH0wROsbJWI/1739589516/sites/default/files/inline-images/mks-ungalil-oruvan-art.jpg)
உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளங்கள் வாயிலாகக் கேள்விகளுக்குக் காணொளி வாயிலாகப் பதிலளித்து வருகிறார். அந்த வகையில் இன்று “அப்பா” எனும் பொறுப்பு, அற்ப சிந்தனை என்று சொல்லும் மத்திய ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?, கல்விக்காக நிறையச் செய்ய வேண்டும், கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடா?, டப்பிங் வாய்ஸ் பழனிசாமி, பாலியல் குற்றங்கள், உணவு மற்றும் உடற்தகுதி, வெளி மாவட்டப் பயணங்கள் மற்றும் பற்றி எரிந்த மணிப்பூர் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.
அந்த வகையில் தலைவர், முதல்வர், இப்போது அப்பா என்று சொல்லுகிறார்களே? என்ற கேள்வி முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசுகையில், “திமுகவினர், கட்சிக்குத் தலைவர் என்பதால் தலைவர் என்று அழைக்கின்றனர். முதல்வர் பொறுப்பில் உள்ளதால் முதல்வர் என்று அழைக்கின்றனர். இப்போது உள்ள இளைய தலைமுறையினர் என்னை அப்பா என்று அழைப்பதைக் கேட்கும்போது ரொம்ப ஆனந்தமாக உள்ளது. காலப்போக்கில் மற்ற பொறுப்புக்கு வேறு யாரவது வருவார்கள். ஆனால் அப்பா என்ற இந்த உறவு மாறாது. இந்த சொல் என் பொறுப்புகளை இன்னும் கூட்டியுள்ளது. நான் தமிழ்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடைமைகள் நிறைய இருக்கிறது என எனக்கு உணர்த்துகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்துள்ளது. தமிழகத்திற்கு இந்த பட்ஜெட்டில் என்ன நன்மை கிடைத்திருக்கிறது என்ற கேள்வி முதல்வர் மு.க. ஸ்டாலின், “தமிழகத்திற்கு இந்த பட்ஜெட்டில் என்ன நன்மை கிடைத்திருக்கிறது?. தமிழகத்தை முழுமையாகப் புறக்கணித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் இல்லை. பெயரைக் கூடச் சொல்வதில்லை. மாநிலங்களை ஒப்பிட்டு மத்திய அரசு வெளியிடுகிற எல்லா புள்ளி விவரங்களிலும் தமிழகம் சிறப்பாகச் செயல்படுவதாக அறிக்கை தருகிறார்கள். ஆனால் பணம் மட்டும் தர மாட்டார்கள் என்று முரண்டு பிடிக்கிறார்கள். மாநில அரசின் நிதிகளை வைத்தே திட்டங்களைச் செயல்படுத்தக் கூறுகிறார்கள். மாநில அரசின் நிதிகளை வைத்தே திட்டங்களை செய்துகொண்டிருந்தாலும், மத்திய அரசின் நிதி பங்களிப்பு கிடைத்தால் தானே இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்.
நம் மாணவர்கள் படிப்பதற்கான நிதியைக் கூட கொடுக்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம். ஏற்கனவே கொடுத்துக்கொண்டிருந்த நிதியையும் கொடுக்காமல் நிறுத்தினால் என்ன செய்வது. இப்படி மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறோம். இது நம்முடைய உரிமை. இதனைக் கேட்பதை அற்ப சிந்தனை என்று மத்திய அமைச்சர் சொல்கிறார். மத்திய அரசில் இருப்பவர்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா எனக்குக் கேட்கத் தோன்றுகிறது” எனப் பதிலளித்தார்.