இன்று அதிமுக நிர்வாகிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
சென்னை ராஜ்பவனில் ஆளுநரை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை குறித்து ஆலோசிக்க இருக்கலாம் எனத் தகவல் வெளியானது.
சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவர் பதவி தொடர்பாகவும், கோவை கார் வெடிப்பு முதலியவை குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது.
ஆளுநருடனான சந்திப்பிற்குப் பிறகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாணவர்களிடையே போதைப் பொருள் பழக்கம் அதிகரித்திருக்கிறது. போதைப் பொருளை தடுக்கவில்லை. அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகம் முழுதும் பரவும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கூறியுள்ளேன். அதே போல் எந்த துறை எடுத்தாலும் லஞ்சம். லஞ்சம் இல்லாத துறையே இல்லை. அதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.
மருந்து தட்டுப்பாடு. அமைச்சரே ஒப்புக் கொண்டார். அதிமுக ஆட்சியில் மருந்து தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. இன்று பல முக்கிய மருந்துகள் இல்லை. மருந்து தட்டுப்பாடு வரவே இந்த அரசு தான் காரணம். உள்ளாட்சிக்கு மத்திய அரசு நிதி அனுப்புகிறது. உள்ளாட்சிக்கு அனுப்பப்படும் நிதியை இந்த அரசு மறைமுகமாக அனுப்பியுள்ளது.
24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுகிறது. உரிய உரிமம் பெறாமலும் மது விற்கப்படுகிறது. இது குறித்தும் ஆளுநரிடம் கூறப்பட்டது. இவை அனைத்தையும் படித்துப் பார்த்து விசாரிக்கிறேன் எனக் கூறியுள்ளார். ஆளுநரின் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. திமுக மீது இவ்வளவு புகார்களைக் கூறியுள்ளேன். இதைத் தட்டிக்கேட்க ஒரு ஆள் வேண்டும் அல்லவா. ஆளுநர் தான் தட்டிக் கேட்க முடியும். ஊடகங்களைத் தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன். இந்த தமிழகத்தைக் காப்பாற்றுங்கள். உண்மை சம்பவங்களை மக்களுக்கு தெளிவு படுத்துங்கள்” எனக் கூறினார்.